சென்னையிலிருந்து இடம் பெயரும் 'ஐஎன்எஸ் அடையார்'
சென்னை: சென்னையில் பல காலமாக செயல்பட்டு வரும் கடற்படை தளமான ஐஎன்எஸ் அடையார், விரைவில் வேறு பகுதிக்கு மாற்றப்படவுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு அதிகாரி அமர் கே.மாதவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய கடல்பகுதியில் 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் இந்திய கடற்படை சிறப்பாக செயல்பட்டது. இந்த வெற்றி தினத்தை கொண்டாடும் 41-வது ஆண்டு விழா 4-ந்தேதி இந்திய கடற்படை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதற்காக இந்த ஆண்டு வாசகமாக இந்திய கடற்படையில் கடலோர சக்தியே தேசிய பாதுகாப்பு என்ற புதிய வாசகம் மூலம் தங்கள் பணியை மேற்கொள்ள உள்ளோம். தற்போது இந்திய கடற்படை பல்வேறு புதிய சவால்களை சந்திப்பதற்காக அகில உலக தரத்திற்கு கடற்படை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் செயல்படும் ஐ.என்.எஸ் அடையார் என்ற கடற்படை தள கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடற் அச்சுறுத்தல்கள் குறிப்பாக சோமாலியா கடற் கொள்ளையர்கள் போன்ற அச்சுறுத்தல்கள் ஏதும் வருவதில்லை. எனவே தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படும் இடங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையில் சென்னை அலுவலகத்தை இடமாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கடற்படையை மேம்படுத்துவதற்காக கிழக்கு பகுதியை கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தின் படி புதிதாக இந்திய கடற்படையில் 30 முதல் 40 நவீன ரக கப்பல்கள் வாங்கப்பட உள்ளது. இந்த கப்பல்கள் நாடு முழுவதும் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அதேபோல் அதிநவீன ரக போர் விமானங்களும் வாங்கப்பட்டு அரக்கோணம் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது.
கடற்பகுதியில் இந்திய நாட்டு எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கும் விழிப்புணர்வு அளித்து வருகிறோம். இருந்தாலும் நாகப்பட்டினத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தான் மீன்பிடி பணிகளுடன், மீனவர்களும் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்தப் பகுதியில் மீனவர்கள் நலன் கருதி பாதுகாப்பு கருதி கடற்படை அதிக கவனம் செலுத்திவருகிறது. இருந்தாலும் இந்தப்பகுதியில் அண்டைநாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.
கடற்படை பாதுகாப்பை பொருத்தவரையில் கடந்த மார்ச் மாதம் நடந்த கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற 4 ஆயிரம் பக்தர்களுக்கு பாதுகாப்பும், பல்வேறு காலநிலைகளில் மீனவர்களுக்கும், பிரதீபா காவேரி கப்பலுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றார்.
ஐஎன்எஸ் அடையார் கடற்படைத் தளம் தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு மாற்றப்படும் என்பது குறித்து அமர் கே மாதவன் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இலங்கை மூலமாக சீனாவின் சவால்கள் அதிகரித்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டம் அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்திற்கு இது மாறலாம் அல்லது நாகை, தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு இடம் பெயரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில், இந்திய கடற்படையின் விமான தளம் ஒன்று நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. 1982ம் ஆண்டு முதல் இது இயங்கி வருகிறது. அதை 2009ம் ஆண்டு மேம்படுத்தி ஐஎன்எஸ் பருந்து என்று பெயரிட்டு கடற்படைத் தளமாக மாற்றினர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications