சமுதாய அமைப்புக்களை ஒருங்கிணைத்தால் அது சாதி அரசியலா?: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: இப்போது நான் சாதி அரசியல் செய்வதாக கூறும் கருணாநிதி, 2001 சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து சாதித் தலைவர்களையும் இணைத்து அமைத்தக் கூட்டணிக்கு பெயர் என்ன? பச்சையான சாதிக் கூட்டணி தானே? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலித்துகளுக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல, 'காதல் நாடகத் திருமணங்கள்' என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும், வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் பழி வாங்கலையும் தான் எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி என் மீதும், பாமக மீதும் அவதூறு குற்றச்சாற்றுக்களை சுமத்தியிருக்கிறார். சாதிய அமைப்புக்களை திரட்டி, தலித்துகளுக்கு எதிராக அபாயகரமான அரசியல் செய்வதாகவும், இதற்காக என் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தலித் சமுதாயத்தினருக்கு வழங்கபட்டுள்ள சில சட்ட உரிமைகளை அச்சமுதாயத்தில் உள்ள சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னையில் கடந்த 2ம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கபட்டது. பாதிக்கபட்ட சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் அனைத்து சமுதாயக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஏற்பாடு செய்தது.

அப்போது, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், அதை தடுக்கும் வகையில் அந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள், தாங்கள் அநியாயமாக பழி வாங்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை சாதிய அரசியல் என்று கருணாநிதி முத்திரை குத்துவாரேயானால், என் மீதும் வன்னியர்கள் மீதும் கருணாநிதிக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தர்மபுரி நிகழ்வுகள் தொடர்பாக கடந்த நவம்பர் 17ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே, தமிழகத்தில் சமுதாய மோதல்களின் பின்னணியில் ஒரு திராவிடத் தலைவர் இருப்பதாக கூறியிருந்தேன். இப்போது பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக அழைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருப்பதன் மூலம் அந்தத் தலைவர் தாம் தான் என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டிக்கிறார்.

இப்போது நான் சாதி அரசியல் செய்வதாக கூறும் கருணாநிதி, 2001 சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து சாதித் தலைவர்களையும் இணைத்து அமைத்தக் கூட்டணிக்கு பெயர் என்ன? பச்சையான சாதிக் கூட்டணி தானே?.

இப்போது பழிவாங்கலில் இருந்து காத்துக் கொள்வதற்காகச் சமுதாய அமைப்புக்களை நாங்கள் ஒருங்கிணைத்தால் அது சாதி அரசியலா?.

அதேபோல் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், இன்னும் சில திராவிடக் கட்சித் தலைவர்களும் தலித்துகளுக்கு எதிராக மற்ற சமுதாயங்களை பாமக ஒருங்கிணைப்பதாகவும், காதல் மற்றும் கலப்பு திருமணங்களை எதிர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாற்றுகளை பாமக திட்டவட்டமாக மறுக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியோ அல்லது அனைத்து சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அமைப்புகளோ தாங்கள் தலித்துகளுக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல என்றும் 'காதல் நாடகத் திருமணங்கள்' என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும், வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் பழி வாங்கலையும் தான் எதிர்ப்பதாகக் கூறியுள்ளன.

- காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு மணங்களுக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பணம் பறிக்கும் நோக்குடன் பணக்கார குடும்பத்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதையும், பின்னர் அந்தப் பெண்ணை திரும்ப ஒப்படைப்பதற்காக பெண்ணின் குடும்பத்தினருடன் பேரம் பேசி லட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் பணம் பறிப்பதை கருணாநிதியும் மற்ற கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?.

- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கட்சிகள் வழங்கும் நீதி என்ன?.

- தர்மபுரி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி முடித்து திரும்பும் மாணவிகளிடம் தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர் அருவருக்கத்தக்க வகையில் ஈவ்டீசிங் செய்வதையும் அதை தட்டிக் கேட்போர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரச் செய்வதையும் இந்தக் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா?.

- தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை இந்தக் கட்சிகள் ஒப்புக் கொள்கின்றனவா? இல்லையா?

- முகாந்திரமே இல்லாமல் ஒருவர் மீது பயங்கரவாத புகார் சுமத்தி, சிறையில் அடைக்க வகை செய்வதற்காக தடா, பொடா ஆகிய சட்டங்களை எதிர்த்த இந்தத் தலைவர்கள், தலித் புகார் அளித்தாலே, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் கொடிய வன் கொடுமை சட்டத்தை எதிர்க்காதது ஏன்?. இதன் நோக்கம் தலித்துகளின் வாக்குகளை வாங்குவதாக இருந்தால் அதற்கு பெயர் சாதி அரசியல் அல்லாமல் வேறு என்ன?

தர்மபுரி சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பிய கட்சிகள் இந்த நிகழ்வுகள் குறித்தும் உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பி உண்மை நிலையை உலகுக்கு தெரிவிக்கட்டும். அவ்வாறு செய்யாமல் பாமக மீதும், பிற பிற்படுத்தபட்ட, மிகவும் பிறபடுத்தபட்ட சமுதாயங்கள் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்புவோம் என்றால், இந்த சமுதாயத்தினரின் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று அறிவிக்கட்டும். இதற்கு கருணாநிதியும் மற்ற தலைவர்களும் தயாரா? என்று அறைகூவல் விடுக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+