சென்னையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி கொலை- 20 பவுன் நகை கொள்ளை
சென்னை: செங்குன்றம் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெகட்ரின் மனைவி நகைக்காக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் வெஜிடேரியன் நகர் செல்லும் சாலையில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் கிடந்தது. அந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்து கொன்றிருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
பிணத்தின் அருகில் வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் கிடந்தது. வாக்காளர் அடையாள அட்டையில் தமிழ்ச்செல்வி, முகப்பேர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அட்டையில் உள்ள முகவரிக்கு சென்றபோது தான் இறந்த பெண் யார் என்பது தெரிய வந்தது.
பிணமாகக் கிடந்தவரின் பெயர் மல்லிகா(50). அவரது கணவர் சதாசிவம். கடந்த 2011ம் ஆண்டு கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ஓய்வு பெற்ற பிறகு மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் வசித்து வந்தனர். அவர்களுக்கு சரவணன், சக்திவேல் என்ற 2 மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மல்லிகா முகப்பேரில் வசிக்கும் தனது சகோதரி தமிழ்ச்செல்வியுடன் காவேரிப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு நேற்று ஊர் திரும்பினர்.
நேற்று இரவு 10.30 மணிக்கு சகோதரிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கினர். பின்னர் தமிழ்ச்செல்வி பேருந்து மூலம் முகப்பேர் கிளம்பினார். மல்லிகா ஷேர் ஆட்டோவில் மாத்தூர் கிளம்பினார். அவர் ஏறிய ஆட்டோ எம்.எம்.டி.ஏ. காலனி வரை செல்லாது என்று டிரைவர் தெரிவித்ததால் அவர் மூலக்கடை சென்று அங்கிருந்து வேறு ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல நினைத்தார். அதன்படி மூலக்கடையில் இறங்கினார் மல்லிகா.
அப்போது நள்ளிரவு நேரம், மல்லிகாவோ 20 பவுன் தங்க நகை அணிந்திருந்தார். தங்கைக்கு போன் செய்து தான் மூலக்கடை வந்துவிட்டதாகவும் அங்கிருந்து வீட்டு்க்கு ஆட்டோ பிடித்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அவருக்கு போன் செய்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு போனாரோ என்று நினைத்து உறவினர்கள் கலங்கினர். இந்நிலையில் இன்று காலை மல்லிகா பிணமாகக் கிடந்த தகவல் அறிந்து அதிர்ந்தனர்.
மூலக்கடையில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள வடபெரும்பாக்கத்தில் மல்லிகாவின் உடல் வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதனால் அவரை யாரோ ஆட்டோவில் ஏற்றி வந்து வாயில் துணியைத் திணித்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் மாயமாகி இருக்கலாம் என்று போலீசார் நினைக்கின்றனர்.
இந்த கொலையில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்புள்ளதா அல்லது ஆட்டோ டிரவைர்களின் கைவரிசையா இல்லை கோயம்பேட்டில் இருந்தே யாரேனும் பின் தொடர்ந்து வந்து கொலை செய்துள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூலக்கடையில் நேற்று நள்ளிரவு நின்றிருந்த ஆட்டோக்கள் எவை, எவை அதில் யார், யாரை ஏற்றிச் சென்றனர் என்ற தகவலை போலீசார் சேகரித்துள்ளனர். அதில் முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாகவும், கொலையாளிகள் விரைவில் சிக்குவார்கள் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மல்லிகாவின் சகோதரி தமிழ்ச் செல்வி கூறுகையில், நாங்கள் கோயம்பேட்டில் வந்திறங்கியபோதே இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. என் வீட்டில் வந்து தங்கிவிட்டு காலையில் போ என்று கூறியும் அக்கா ஆட்டோ பிடித்துச் செல்வதாக கூறிச் சென்றார். படுபாவிகள் இப்படி கொன்றுவிட்டனரே என்றார்.












Click it and Unblock the Notifications