நிருபர்களிடம் சிரிச்சுக்கிட்டே பேசிய விஜயகாந்த்!

சில வாரங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட நிருபர்கள் மீது பாய்ந்து குதறி விட்டார் விஜயகாந்த். நாயே என்று ஆரம்பித்து பலவாறாக திட்டித் தீர்த்தார் விஜயகாந்த். அவரது செயல் அரசியல்வாதிகளையே அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்தநிலையில் நேற்று கோவை வந்தார் விஜயகாந்த். கோவை மத்திய சிறைக்குப் போய் தனது கட்சி எம்.எல்.ஏ. பார்த்திபனை சந்தித்துப் பேசி விட்டு வெளியே வந்த விஜயகாந்த்தை வழக்கம் போல செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
எப்படிக் கேள்வி கேட்டால் எப்படிப் பாய்வாரோ என்ற எதிர்பார்ப்புடன் செய்தியாளர்கள் இருந்த நிலையில் மிகப் பொறுமையாக பதில் சொன்னார் விஜயகாந்த். அதேபோல அவரது கட்சியினரும் தேவையில்லாமல் செய்தியாளர்களைத் தடுக்கவோ, நிறுத்தவோ முயலவில்லை.
வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதில் ஒரு நிருபர் திமுகவுடன் கூட்டணி அமையுமா என்று கேட்டார். வழக்கமாக இதுபோன்ற கேள்விகளுக்கு டென்ஷனாக பதில் சொல்லும் விஜயகாந்த் நேற்று ரொம்ப வித்தியாசமாக, அமையலாம் சார். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாட்கள் உள்ளன. இப்போதே உங்களுக்கு எல்லாத்தையும் சொல்ல முடியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கணுமா என்று சிரித்தபடியே பேசினார்.
விஜயகாந்த் இப்படிச் சிரித்தபடியே பதில் சொன்னது செய்தியாளர்களுக்கும் சந்தோஷத்தைத் தர, நல்லவேளை தப்பா கிப்பா எதுவும் நடக்கலை போங்க என்று அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுடன் இடத்தைக் காலி செய்தனர்.


Click it and Unblock the Notifications
