அமெரிக்காவில் அகில இந்திய காங்கிரஸின் தமிழக கிளை துவக்கம்
நியூயார்க்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு இயக்கங்களில் ஒன்றான இந்திய தேசிய அமெரிக்க ஓவர்சீஸ் காங்கிரஸின் தமிழக கிளை திறப்பு விழா நியூயார்க்கில் சிறப்பாக நடைபெற்றது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இயக்கம் இந்திய தேசிய ஓவர்சீஸ் காங்கிரஸ். கடந்த 2001ம் ஆண்டு இந்த அமைப்பை அமெரிக்காவுக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார்.
ஐ.நா. சபையில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு கேரளா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் என்று அந்தந்த மொழி பேசும் காங்கிரஸாரைக் கொண்டு கிளைகள் துவக்கப்பட்டு கூட்டமைப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக கிளை திறப்பு விழா நியூயார்க்கில் நடைபெற்றது.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் புதிய கிளையை துவக்கி வைத்தார். இந்த விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், இளைஞர் காங்கிரஸின் வாழைப்பாடி ராமசுகந்தன், பாலக்காடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழக கிளையின் தலைவராக நியூயார்க்கில் வாழும் மருத்துவ தொழில் முனைவர் ஜான் ஜோசப் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக பேசிய திருநாவுக்கரசர் கூறுகையில்,
பிரமதர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் இந்தியாவை வல்லரசாக மாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள மின்பற்றாக்குறை தீர வெளிநாடு வாழ் தமிழர்கள் மின் உற்பத்தி, சூரிய ஒளி மின்சாரம் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலிலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே அமையும் என்றார்.
குமரி அனந்தன் பேசுகையில்,
சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழகர்களின் பங்களிப்பை தேசிய அளவில் கொண்டு செல்ல காங்கிரஸ் உதவியது என்றார்.












Click it and Unblock the Notifications