நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்... ரயில் நிலையங்களில் சோதனை

ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்புதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் கடந்த 2-ந் தேதி பைப் வெடிகுண்டு புரளி ஏற்பட்டதை தொடர்ந்து சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முழுவதும் சி.சி.டிவி. கேமராவினால் கண்காணிக்கப்பட்டு, அதற்கு என சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் அதனை சமாளிக்கும் வகையில் மணல் மூட்டைகள் மூலம் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மறைமுகமான பகுதி ஒன்றில் போலீசார் கோபுரம் அமைத்து ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் வெடிகுண்டு சோதனை செய்யும், ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதே போன்று எழும்பூர், தாம்பரம், மாம்பலம் உள்பட முக்கியமான ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருப்பூர், கோயம்புத்தூர் ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
கண்காணிப்பு வளையத்தில் மதுரை
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுரை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் பலமுறை வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மீனாட்சி அம்மன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 5 கோபுரப்பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். கோயிலை சுற்றியுள்ள ஆடிவீதிகளில் வெடி பொருட்கள் இருக்கிறதா என மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அம்மன்சன்னதி உள்ளிட்ட ஒவ்வொரு வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மாவட்டங்களில் கவனம்
அதேபோல் பழனி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், ரயில் நிலையம், சாத்தனூர் அணை, பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தும், மெட்டல் டிடக்டர் மற்றும் அதி நவீன ஸ்கேனர் மூலம் சோதித்த பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். தென்மாவட்டங்களில் 10ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி, கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
இலவச உதவி எண்
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரயில்வே போலீஸ் இலவச எதவி எண் 9962500500 மற்றும் ரயில்வே பாதுகாப்புபடை இலவச உதவி எண் 9003161710 ஆகிய எண்களில், பயணிகள் தொடர்பு கொண்டு ரயில் குற்றங்கள் குறித்த தகவல் தெரிவிக்கலாம்.
ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக இருக்கும் பொருட்கள் குறித்தோ அல்லது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்தோ தகவல் தெரிவித்தால் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் எந்த பகுதியில் இருந்தும் இந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications