எப்.டி.ஐக்கு எதிரான தீர்மானம்: ராஜ்யசபாவில் தோற்றது! அரசு தப்பியது!

லோக்சபா
அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த தீர்மானம், லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டது. லோக்சபாவில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் மத்திய அரசு தப்பியது.
ராஜ்யசபாவில்
இந்நிலையில் அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் நேற்று அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வந்து விவாதத்தைத் தொடங்கி வைத்தார். நேற்றைய விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக அரசை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாநிலங்களவையில் அமளிகளுக்கும் காரசாரமான வாக்குவாதங்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சி வெளிநடப்பு செய்தது.
வாக்கெடுப்பு
பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான அதிமுகவின் தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 109 எம்.பிக்களும் எதிராக 123 எம்.பிக்களும் வாக்களித்தனர். இதனால் மத்திய அரசு 14 வாக்குகள் வித்தியாசத்தில் தப்பி வெற்றி பெற்றிருக்கிறது. வாக்கெடுப்பின் போது அவையில் மொத்தம் 232 உறுப்பினர்கள் இருந்தனர்.
ஆம்புலன்ஸில் வரவழைக்கப்பட்ட எம்.பி
ராஜ்யசபையில் தங்களது பெரும்பான்மை இல்லை என்பது மத்திய அரசு அறிந்த ஒன்றுதான். எங்கே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடுமோ என்று அலறிப் போய் உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் இருந்த எம்.பிக்களையெல்லாம் அள்ளிப் போட்டு வரவழைத்தது காங்கிரஸ்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வஹ்மரே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேரடியாக மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாடாளுமன்றத்துக்க் வந்து ராஜ்யசபா வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்.
இதேபோல் மற்றொரு எம்.பியான ஜனார்த்தன் ரெட்டியும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரும் அவைக்கு வெளியே இருந்தபடியே வாக்களித்திருக்கிறார். பிரதமர் மன்மோகன்சிங், அரசின் நியமன எம்.பிக்கள் 10 பேருக்கும் போன் போட்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.
எப்படியோ! சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி கானல் நீராகிப் போனது. இதையடுத்து மத்திய அரசு நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது












Click it and Unblock the Notifications