உலகம் அழியப்போகுதாமே? வள்ளலார் தீபம் பற்றி பரவிய வதந்தியால் பரபரப்பு
நெய்வேலி : கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தீபம் அணைந்ததாக வதந்தி பரவியது. இது உலகம் அழிவதற்கான அறிகுறி என்று அச்சமடைந்த பெண்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
வடலூரில் ஜோதி ரூபாமாக காட்சித்தருகிறார் வள்ளலார். அவர் ஏற்றி வைத்த தீபம் கடந்த 140 ஆண்டுகளாக அணையாத ஜோதியாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதனைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் திரள்வார்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று காலை இந்த தீபம் அணைந்து விட்டதாகவும், இது உலக அழிவிற்கு அறிகுறி என்றும் மக்கள் பேசத் துவங்கினர். இந்த செய்தி காட்டுத் தீ போல மாவட்டம் முழுவதும் பரவியது. கடலூர் மாவட்டத்தை யொட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தை தாண்டியும் இந்த வதந்தி பரவியது.
இதனையடுத்து வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி என நகர் புறங்களில் மட்டுமின்றி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். உலகை அழிவில் இருந்து காப்பாற்ற வள்ளலார் இந்த அருட்பெரும் ஜோதியை ஏற்றி வைத்தார். அது அணைந்து போனதால் அதற்கு பரிகாரமாக வீடுகள் தோறும் விளக்கு ஏற்றியதாக பெண்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே 2012 டிசம்பர் மாதம் உலகம் அழியப்போகிறது என்று புரளி கிளம்பியுள்ள நிலையில் தற்போது வள்ளலார் விளக்கு அணைந்து போனதாக எழுந்த வதந்தி மக்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இதுபோன்று எந்தவித சம்பவமும் நிகழவில்லை என்று வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். வள்ளலார் ஏற்றிய தீபம் உள்பட அனைத்து அணையா தீபங்களும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவில் கருவரையில் எருமை புகுந்ததாக வதந்தி பரவியது. இதனால் ஆண்களுக்கு ஆபத்து என்று பெண்கள் விளக்கேற்றினார்கள். அதேபோல் பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி பரவியது. இப்போது வள்ளலார் கோவில் தீபம் அணைந்து போனதாக வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications