கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மின்சாரம் போயிருந்த நேரம் பார்த்து, அடுத்தவருக்குச் சொந்தமான மனைவியுடன் ஓடிப் போய் விட்டார், அந்தப் பெண்ணின் காதலர். இதையடுத்து போலீஸார் இருவரையும் பிடிக்க வலை வீசித் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பெரியவாடியைச் சேர்ந்தவர் வித்யாவதி, பட்டதாரி ஆசிரியை. வித்யாவதிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினருக்கும் கடந்த நவம்பர் 26-ம் தேதி கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் சிவன் கோவிலில் திருமணம் செய்து, அன்றைய தினமே கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.
அதன்பிறகு தை மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று மணமக்கள் வீட்டார்கள் முடிவு செய்தனர். திருமணத்திற்குப் பின்னர் வித்யாவதி தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி இரவு வீட்டில் மின்சாரம் போயிருந்தது. அந்த சமயத்தில் வித்யாவதியைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், வித்யாவதி காதலித்து வந்ததாக கூறப்பட்ட அருண் என்பவரையும் காணவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாரிடம் போனார்கள் வித்யாவதி மற்றும் அருணின் குடும்பத்தினர்.
தங்களது மகளை அருண் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் வித்யாவதியின் தந்தை பன்னீர்செல்வம்.மின்சாரம் போயிருந்ததை சாதகமாக பயன்படுத்தி மகளைக் கடத்திப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications