உடனே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?.. கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: மின்தடை மற்றும் புதிய மின் திட்டங்கள் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான உண்மை விவரங்களைத் தெரிவிக்கின்ற வகையில், அதிமுக அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை அளித்திட முன்வருமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திமுக தொண்டர்களுக்கு முரசொலியில் எழுதியுள்ள கடிதம்:

வரலாற்றிலேயே இல்லாத மின் வெட்டு காரணமாக தமிழகத்திலே உள்ள பெரிய தொழில்கள், சிறிய தொழில்கள் எல்லாம் வேறு மாநிலங்களை நோக்கி சென்றிட நேரம் பார்த்துக்கிடக்கின்றன. அப்படி சென்றுவிட்டால் அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கதி என்ன ஆவது?.

தற்போதே கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரியில் உள்ள தொழிலாளர்கள், வேலையில்லாத காரணத்தால் அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச்சென்று விட்டார்கள். தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் மாணவர்கள் எப்போது மின்சாரம் வரும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலை. இந்த நிலைமைகளை எல்லாம் எடுத்து விளக்கிடத்தான் கழகத்தின் சார்பில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு, தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

1967-ம் ஆண்டு வாக்கில் பெரியவர், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கழக தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்துவிட்டு, ‘‘சிங்கிள் டீயைக் குடித்து விட்டு மணிக்கணக்கில் தேர்தல் பணியாற்ற கூடியவர்கள் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள்'' என்று பாராட்டினார்.அதிலே ஒரு சின்ன மாறுதல்.

தேர்தல் பணியாற்றுவதிலே மாத்திரமல்ல, திமுக நடத்துகின்ற போராட்டங்களில் கலந்து கொள்ளப் புறப்படுவதிலும் கழகத்தினர் வேறு யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எத்தனையோ முறை நீ நிரூபித்துக் காட்டியிருக்கிறாய். அதனை மேலும் நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம்தான் நாளை நடைபெறும் அறப்போர் ஆர்ப்பாட்டம்.

இன்னும் சில மாதங்களில் மின் உற்பத்தி கிடைக்கப்போகிறது என்று ஆட்சியாளர்கள் பலமாக குரல் கொடுக்கிறார்களே, அந்த மின் உற்பத்திக்கு காரணமே திமுக ஆட்சிதான். கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள்தான் தற்போது மின் உற்பத்தியை அளிக்கப்போகின்றன. அதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிவார்கள். எனவே இனியும் அந்த குற்றச்சாட்டினைக் கூற முடியாது என்ற அளவில்தான் ஆளுங்கட்சிக்காரர்கள் மின் உற்பத்தி, மின் வெட்டு பற்றி நாம் வைக்கின்ற எந்த குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மின்வெட்டு காரணமாக - தொழில் துறை, வேளாண்மைத்துறை, ஜவுளித்துறை, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பல முறை உறுதி மொழி வழங்கினாலும், அதில் எந்த உறுதிமொழியும் இதுவரையில் உருப்படியாக நிறைவேறவில்லை.

மாறாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்புகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். மேட்டூர் அணை வறண்ட நிலையில், அணைக்குள்ளேயே அங்குள்ள விவசாயிகள் சோளம் விதைத்திருக்கிறார்களாம். நூற்றுக்கணக்கான ஆலைகள் தொடர்ந்து மூடிக்கிடப்பதால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பாலும், வேலை வாய்ப்பு இழப்பாலும், தமிழகத்தின் பொருளாதாரமே தலைகீழாக கவிழ்ந்து அழிந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலையில் தமிழகத்திலே உண்மையான மின்சார நிலைமை என்ன?. மின் வெட்டு பிரச்சினை எப்போது நீங்கும்?. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்கள் என்னென்ன?. அவற்றிலிருந்து மின்சாரம் எப்போது கிடைக்க தொடங்கும்?. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் என்னென்ன?.

இதைப்பற்றி எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான உண்மை விவரங்களைத் தெரிவிக்கின்ற வகையில், அ.தி.மு.க. அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை அளித்திட முன்வருமா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+