ஸ்ஸ்ஸ் அப்பாடா உலகம் அழியலை!....புஸ்வானமாகிப்போன மாயன் காலண்டர்...
இன்று முதல் புதிய சூரியன்... இது புதிய உலகம்... இதுதான் டிசம்பர் 22ம் தேதி அதிகாலை மாயன் இனத்தவர்கள் பேசிய முதல் வார்த்தையாக இருந்தது. 2012 டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிந்துவிடும் என்று கடந்த ஒரு வருடகாலமாக பீதி நிலவியது. இந்த அச்சத்திற்கு விடை கிடைக்கும் வகையில் இது வெறும் வதந்திதான். உலகம் அழியவில்லை என்று நம்பிக்கை பெருமூச்சு விட்டுள்ளனர் உலக மக்கள்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன்களின் காலண்டர் கி.மு. 3,113-ம் ஆண்டில் தொடங்கி கி.பி. 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி அதாவது நேற்றுடன் முடிவடைகிறது.
கவுதமாலாவிலுள்ள பழங்கால கல்வெட்டில் இந்த மாயன் காலண்டர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. எனவே 21-ந் தேதியுடன், உலகம் அழிந்து விடும் என்று பீதி கிளப்பி விடப்பட்டது. ஏராளமானோர் தற்கொலை செய்வார்கள், பெரிய அளவில் மின்தடை ஏற்படும், இயற்கை பேரழிவாக நிலநடுக்கம் போன்றவை ஏற்படலாம் என்றெல்லாம் பீதி ஏற்படுத்தப்பட்டது. அந்தநாளும் வரவே அச்சத்திலும் பீதியிலும் உறைந்த மக்கள் தங்களின் உறவினர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர். கடைசி நாளை சந்தோசமாக கொண்டாடுவோம் என்று உலகம் முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர்.

புதிய சூரியன் உதயம்
மெக்சிகோ, கவுதமாலா, பிரேசில், ஹோன்டூராஸ் நாடுகளில் வசிக்கும் பூர்வீக மக்கள் மாயன் காலண்டரை நம்புகிறார்கள். மாயனை நாகதெய்வம் வடிவில் சிலை அமைத்து வழிபடுகிறார்கள். மெக்சிகோவில் ஷிஷென் இத்ஸா என்ற இடத்தில் குகுல்கான் என்ற பெயரில் மாயன் பழங்கால கோவில் அமைந்துள்ளது. அதன் அருகில் பிரமாண்ட மாயன் சிலையும் இருக்கிறது. உலகம் அழிந்துவிடும் என்ற பீதியில் இந்த மாயன் கோவிலில் திரளான மக்கள் கூடி தியானம் செய்தனர். அந்த இடம் அழிவில் இருந்து தப்பும் என்ற நம்பிக்கை பரவியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
மாயன் இனத்தை சேர்ந்த மக்கள் வெள்ளை உடைகளை அணிந்து டிரம்ஸ், மேளதாளங்கள் முழங்க நடனமாடி உற்சாகமாக இருந்தனர். மறுநாள் புதிய உலகம் பிறக்கும். புதிய சூரியன் உதிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். டிசம்பர் 22 ம் தேதி காலையில் விடிந்த உடன்... ஒருவரை ஒருவர் கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். இது புது உலகம்... இந்த சூரியன் புதிய சூரியன் என்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஏலியன்கள் உடையில்...
உலக அழிவில் இருந்து தப்ப தெற்கு பிரான்சில் புகாராக் என்ற ஆன்மீக மலையில் தஞ்சம் அடையலாம் என்று வதந்தி பரப்பப்பட்டது அதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அங்கு குவிந்தனர். அங்கு விடுதிகளும், ஹோட்டல்களும் நிரம்பி வழிந்தனர். அங்கு மிகப்பெரிய யுஎப்ஓ வடிவ விடுதி அமைக்கப்பட்டது. அந்த உணவகங்களில் இருந்த பணியாளர்கள் ஏலியன்களைப் போல உடை அணிந்து உணவு பரிமாறினர்.

துருக்கியில் தெய்வீக உணவு
துருக்கியில் உள்ள சிரின்ஸ் என்ற நகரம் உலகம் அழிவில் இருந்து தப்பும் என்ற கருத்து நிலவியது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். உலகம் அழியப்போவதை எண்ணி அச்சத்தோடு பிரார்த்தனை செய்தனர். அங்குள்ள உணவு விடுதியில் விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. ஹெவன் கெபாப் என்ற உணவும், பார்பிடன் ப்ரூட் டெசார்ட் என்ற சாலட்டும் பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைசி நாளை கொண்டாடுவோம் என்று அழகான உடை அணிந்து ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தினர்.

மந்திர சக்தி மலை
செர்பியாவில் உள்ள ரிடாஞ்ச் மலை பகுதி அதிசய மந்திர சக்தி வாய்ந்தது. அப்பகுதியில் தங்கினால் உலகம் அழிவில் இருந்து தப்பலாம் என்ற மூடநம்பிக்கை பரவியதை அடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அந்த மலையை சுற்றியுள்ள ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிந்தன. டிசம்பர் 21ம் தேதி அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடித் தீர்த்தனர்.

ரஷ்யாவில் கொண்டாட்டம்
உலக அழிவு பீதி ரஷ்யாவில் அதிகமாக பரவியது. மாஸ்கோ நகரில் உள்ள பாதாள அறைகளில் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு தங்க 50000 ருஷ்யன் ருபெல்ஸ் வசூலிக்கப்பட்டது. இப்போது அந்த பீதி முடிவுக்கு வந்ததை அடுத்து 15000 ருபெல்ஸ் பணத்தை திருப்பித் தருகின்றனர். அதேபோல் அணுகுண்டு தாக்கினாலும் பாதிக்கப்படாத ஒரு மியூசியத்தில் தங்க ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன.

லண்டனில் கடைசி உணவு
பிரிட்டனில் ஒருவரை அன்போடு தழுவி கடைசி நாளை கொண்டாடினர். லண்டனில் இதற்காக லாஸ்ட் சபர் கிளப் ஆரம்பித்து சிறப்பு உணவுகளை தயாரித்தனர். ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தினர்.

சீனாவில் புதிய வீடு
உலகம் அழியும் என்ற பீதியை சீனாவில் 'அல்மிட்டி காட்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்படுத்தினர். இதனையடுத்து ஹெபி மாகாணத்தைச் சேர்ந்த லியூ கியூவான் என்ற விவசாயி கண்ணாடி இழையால் ஆன பெரிய கூண்டுகளை தயாரித்தார். 14பேர் தங்கக்கூடிய அந்த அறையில் பதுங்கி கொண்டால் கடும் புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகளில் இருந்து தப்ப முடியும் என்று பிரசாரம் செய்தார்.

அர்ஜென்டினாவில் நள்ளிரவு விருந்து
அர்ஜென்டினாவில் உள்ள புகழ் பெற்ற மலையில் இருந்து ஏராளமான பேர் குதித்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தகவல் பரவியது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மலைக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. சில நகரங்களில் நள்ளிரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வாரணாசியில் பிரார்த்தனை
இந்தியாவில் காசி நகரம் அழியாது என்ற நம்பிக்கை பரவியதை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். கங்கையில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். ஒருவேளை உலகம் அழிந்தாலும் காசியில் மரணமடைந்தால் முக்தி கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடரும் வதந்தி
உலகம் அழியும் என்ற வதந்தி இதேபோல் பலமுறை பரப்பப்பட்டுள்ளது. பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் மூலம் 2060-ல் உலகம் அழிந்து விடும் என்று பிரபல விஞ்ஞானி இசக் நியூட்டன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1997-ல் சான்டியாகோவை சேர்ந்த ஹெவன் கேட் கல்ட் என்ற ஒரு அமைப்பு கூறிய பீதியை நம்பி 39 தற்கொலை செய்தார்கள். இப்படி உலகம் அழியப் போகிறது என்று பீதிகள் ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

புஸ் ஆகிப்போன வதந்தி
2012 டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியாது என்று விஞ்ஞானிகளும், பிரபல ஜோதிடர்களும் கூறினார்கள். எனவே யாரும் பீதி அடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்கள் சொன்னது போலவே உலகம் முழுவதும் நேற்றைய தினம் பெரிய அசம்பாவிதம் நடைபெறவில்லை. பொதுவாக அமைதி நிலவியது. கடைசியில் மாயன் காலண்டர் மர்மத்திற்கு விடை கிடைத்தது.












Click it and Unblock the Notifications