கூடங்குளம் கலவரம்... ஆடிப் போன தென்னகம்
செப்டம்பர் மாதத்தில் தமிழகம் கண்ட பெரும் பரபரப்புச் சம்பவம் கூடங்குளத்தில் மீனவர்கள் மீதான காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைதான். கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர்.
50க்கும் மேற்பட்டோரைக் கல்யாணம் செய்து மோசடி செய்ததாக பரபரப்பை ஏற்படுத்திய ஷானாஸ் செப்டம்பரில்தான் கைதானார்.
சென்னையில் நடந்த இஸ்லாமியர்களின் அதிரடி போராட்டத்தைத் தொடர்ந்து கமிஷனராக இருந்த ஜே.கே.திரிபாதி மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார்.

"அண்ணா ஆர்ச்" அகற்றும் பணி தொடங்கியது
சென்னை அரும்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அண்ணா நுழைவு வாயில்கள் இரண்டையும் அகற்றும் பணி தொடங்கியது.

கைதானார் ஷானாஸ்
50 பேரைத் திருமணம் செய்து மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்பட்ட கேரளப் பெண் ஷானாஸ் பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

திருச்சி வந்த சிங்கள யாத்ரீகர்கள் மீது தாக்குதல்!
வேளாங்கண்ணி மற்றும் தஞ்சை பூண்டி மாதா ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வந்த சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டனர்.

கூடங்குளத்தில் கலவரம், போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை இன்று போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு மக்களும் தாக்குதலில் இறங்கியதில் போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியிலும் வன்முறை வெடித்ததில் மீனவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இடிந்தகரையிலும் மக்கள் மீது போலீஸார் தாக்குதலில் குதித்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்: ஸ்தம்பித்தது சென்னை... ஆடிப் போனது அமெரிக்க தூதரகம்!
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று மாலை அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர். சென்னை நகரின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.

இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி.. கமிஷனர் திரிபாதி மாற்றம்
சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் இன்று மாலை நடந்த வரலாறு காணாத இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக திரிபாதியின் பதவி பறிபோனது.

தமிழகத்தில் பாரத் பந்த்
இந்தியா முழுவதும் நடந்த பாரத் பந்த் தமிழகத்தில் பெரிய ஆதரவைத் தரவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல ஆட்டோக்கள் ஓரளவு ஓடவில்லை. மற்றபடி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. அரசுப் பேருந்துகளும் கிட்டத்தட்ட முழுமையான அளவில் ஓடியதால் இயல்பு வாழ்க்கைப் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

ஜெயக்குமார் ராஜினாமா
தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த ஜெயக்குமார் திடீரென ராஜினாமா செய்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போட்டியாக கிளம்புகிறார் என்று கிளம்பிய பரபரப்பால் அவரது பதவி பறிபோனது.

ரிட்டையரானார் டிஜிபி விஜயகுமார்
மத்திய ஆயுதப் படை போலீஸ் டிஜிபியான விஜயகுமார் ஓய்வு பெற்றார். வீரப்பன் ஒழிப்பில் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவரான விஜயக்குமார் சிஆர்பிஎப்பிலும் தனது முத்திரைய்ப பதித்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications