சிகரெட் வாங்கினால் தங்க காசு பரிசு விளம்பரம்: அன்புமணி கடும் பாய்ச்சல்
சென்னை: சிகரெட் வாங்கினால் தங்க காசு பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என்ற விளம்பரத்திற்கு பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புகை பிடித்தல் ஒரு கொடிய உயிர் கொல்லும் பழக்கம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகை பிடிப்பதால் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிகரெட் வாங்கினால் தங்க காசு பரிசு என்ற விளம்பரத்துடன் தமிழர் பண்பாட்டை அவமானப்படுத்தும் அவலம் சென்னை நகரில் நடந்து வருகிறது.
சிகரெட்டுடன் இலவச பரிசுகள் எதையும் அளிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை பொங்கல் பரிசாக அளிப்பது மிகக் கொடுமையான செயல். இந்த சட்டவிரோத செயலை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மேலும் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய சிகரெட் விளம்பரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications