அப்பாவை மகன் (அழகிரி) சந்திப்பது அதிசயமா?: நிச்சயமாக இல்லை, ஆனால்...

திமுக தலைவர் பதவியை பொருளாளர் ஸ்டாலினுக்கு அளிக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார். ஆனால், அதை தென்மண்டல அமைப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி எதிர்க்கிறார்,
திமுக தலைவர் பதவி கொடுத்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன் என்று கூட அழகிரி ஒருமுறை கூறியிருந்தார்.
இந் நிலையில் எனக்குப் பின் ஸ்டாலின்தான் தலைவர் என்று கருணாநிதி அறிவித்துவிட்டதையடுத்து பதிலுக்கு மு.க. அழகிரி, திமுக ஒன்றும் மடம் அல்ல என்று ஆவேச பேட்டியளித்தார்.
இந் நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ஸ்டாலின் தான் அடுத்த தலைவர். பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைத்தால் தலைவர் பதவிக்கு அவரைத்தான் முன்மொழிவேன் என்று கூறிவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளரான மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி பேசுகையில், எங்க மாவட்டத்தில் தளபதியும் (ஸ்டாலின்) அஞ்சாநெஞ்சனும் (அழகிரி) சேர்ந்து செயல்பட்டாலே போதும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றுவிடலாம் என்றார்.
அப்போது இடைமறித்த கருணாநிதி, இதை ரோட்டுல போய் பேசு. இங்கே ஏன் பேசுற?. அங்கே தலைமையை எதிர்த்துப் பேசுவீங்க. இங்கே வந்ததும் அண்ணன்மார் வந்தால் போதும்னு சொல்லுவீங்க.. என்று கடுமையாகப் பேச கூட்டமே அதிர்ந்தது.
இதையடுத்து மூர்த்தி சமாளித்துப் பேச முயற்சிக்க, மதுரையில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். உட்காரு என்று கூறிவிட்டார் கருணாநிதி. கூட்டம் முடிந்த பின் கருணாநிதியிடம் சென்ற மூர்த்தி, தலைவருக்கு எதிரா நான் பேசலை என்று கூற, அதைப் போய் அங்கே உங்க ஊருல சொல்லு என்று கூறிவிட்டுப் போய்விட்டதாக சொல்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து தனது ஆதரவாளர் மூர்த்தி விமர்சிக்கப்பட்டதையடுத்து அழகிரி பெரும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் 6ம் தேதி நடக்க, ஏற்கனவே கருணாநிதி மீது கோபத்தில் இருந்த அழகிரி முதல் நாள் நடந்த திமுக எம்பி கனிமொழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவில்லை. கனிமொழியை சென்னை சி.ஐ.டி காலனி வீட்டிற்கே வந்து தி.க தலைவர் வீரமணி வந்து வாழ்த்த, மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து வாழ்த்தினார். ஆனால், ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலோர் வரவில்லை. அதே நேரத்தில் தயாநிதி மாறன், குஷ்பு ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினர்.
கனிமொழியை சந்தித்து வாழ்த்து சொல்ல வந்த திமுக தொண்டர்களுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தரப்பு தான் உணவு ஏற்பாட்டை செய்ததாம்.
இதில் முக்கியமாக ஆப்சென்ட் ஆனது அழகிரி தான். இத்தனைக்கும் அன்று அவர் சென்னையில் தான் இருந்தார். ஆனால், சி.ஐ.டி காலனி வீட்டில் கருணாநிதி இருந்ததால் தான் அழகிரி போவவில்லை என்று செய்திகள் பரவின.
இந் நிலையில் நேற்று மீண்டும் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார் மு.க.அழகிரி. சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். அங்கிருந்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை அவர் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. இதையடுத்து நிருபர்கள் அங்கு குவிந்தனர்.
அப்போது வீட்டிலிருந்து வெளியே புறப்பட்ட கருணாநிதி, நிருபர்கள் கூடியிருந்தைப் பார்த்து என்ன விஷேசம் என்று என்று கேட்டார். அழகிரி உங்களை பார்க்க வரப் போறதா தகவல் வந்ததே என்று சொல்ல, அதற்கு அப்பாவும் மகனும் சந்திப்பது அதிசயமா என்று கேட்ட கருணாநிதி, ஊடகங்கள் தான் திமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனாலும் கருணாநிதி அழகிரியைச் சந்திக்கவில்லை.












Click it and Unblock the Notifications