காவிரியில் கல்லணை கட்டிய கரிகாலச் சோழனுக்கு மணி மண்டபம்: ஜெ. அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையை வடிவமைத்துக் கட்டிய ஆங்கிலப் பொறியாளர் பென்னிக் குவிக்கின் நினைவு மண்டபம் தேனி அருகே கூடலூர் லோயர் கேம்ப்பில், ரூ.1.25 கோடி செலவில் கட்டப்பட்டு வந்தது. பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று திறப்புவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, நினைவு மண்டபத்தை திறந்து வைத்துப் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:
வைகை படுகையில் வறட்சியை போக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்துடன் உடன்படிக்கை ஏற்படுத்தி முல்லை பெரியாறு அணை கட்டும் பணி துவங்கியது. நிதி போதாத காரணத்தினால் பென்னிகுவிக் இங்கிலாந்து சென்று தனது சொத்தை விற்று அணையை கட்டினார் என வரலாறு கூறுகிறது. பல்வேறு இன்னல்கள் இடையே அணையை கட்டி முடித்தார். பென்னிகுவிக் அவர்களால் வலுவான நிலையில் கட்டப்பட்டுள்ளது. இவருக்கு மணிமண்டபம் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
இந்த அணை எம்.ஜி.ஆர்., காலத்தில் சீரமைக்கப்பட்டது. அணையின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் வலுவான ஆதாரங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அணை நீர்மட்டம் உயர்த்த உச்சநீதிமன்றம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது. ஆனந்த் தலைமையிலான குழுவினர் தங்களின் அறிக்கையில் அணை பாதுகாப்பு பிரச்னை இல்லை என்றும் அணை மட்டம் உயர்த்தப்படலாம் என்றும் தாக்கல் செய்துள்ளது. கேரள அரசு தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது என்றும் தமிழகத்தின் உரிமையை எந்த சூழலிலும் விட்டு கொடுக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலும் மத்திய அரசு வழக்கம் போல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்டுகொள்ளவில்லை.
கரிகாலச் சோழனுக்கு மணிமண்டபம்
தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்ட மக்களின் தாகத்தையும், விவசாயத்தேவையையும் பூர்த்தி செய்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்டப்பட்டது போல திருச்சியில் கல்லணை கட்டிய
கரிகாலச் சோழனுக்கும் மணிமண்டபம் கட்டப்படும். முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமை வாய்ந்த அணை கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் கோடானு கோடி மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் இந்த அணை ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் கல்லணையே மிகவும் பழமை வாய்ந்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு மிகத் தேவையாக உள்ள கல்லணையை மிகச் சிறப்பாக வடிவமைத்து காலம் உள்ளளவும் பயனுள்ளதாக அமைத்தவர் கரிகாலச் சோழன். அவரை தமிழக மக்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாது. மக்களின் தேவையறிந்து அணை கட்டிய கரிகாலச் சோழனுக்கும் விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
பென்னிகுவிக் பேருந்து நிலையம்
ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், தற்போது தேனி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
திருவள்ளுவருக்கு விழா
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் எனது அரசு மீது குற்றம் சாட்டி கருணாநிதி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். திருவள்ளுவர் பெயரில் விருது அறிவித்தது அ.தி.மு.க,. அரசு தான், திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க எம்.ஜி.ஆர். காலத்தில் மொரார்ஜி தேசாயினால் அடிக்கல் நாட்டப்பட்டது. குமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க எமது அரசு நிதி ஒதுக்கி கணபதி ஸ்தபதி மூலம் முழுப்பணியும் முடிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியோ திருவள்ளுவர் சிலை அமைக்க தாம் மட்டுமே காரணம் என கூறி அண்டப்புளுகு சொல்ல தம்மை மிஞ்ச ஆள் இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளார் இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். தமிழர்களுக்கு விருது இந்த விழாவில் 9 பேருக்கு அரசு விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதி சான்றிதழ் ஆகியவைகளை ஜெயலலிதா வழங்கினார். மேலும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி அரசாணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.












Click it and Unblock the Notifications