ஈரோட்டில் சக்கரம் கழன்றோடிய அரசு பேருந்து மோதி காரில் பயணித்த தாய், மகன் சாவு
ஈரோடு: ஈரோட்டில் சக்கரம் கழன்று ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி காரில் பயணம் செய்த தாய், மகன் பலியானார்கள்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சாவடிபாளையம் பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி மரகதம்(55). அவர் தனது மகன் தினேஷுடன்(25) இன்று காலை காரில் ஈரோட்டுக்கு கிளம்பினார். காரை தினேஷ் ஓட்ட மரகதம் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்தார்.
இந்த கார் சாவடிபாளையம் வளைவில் திரும்பியபோது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கார் மீது மோதி அதன் மீது ஏறியது. இதில் மரகதம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
கார் நசுங்கியதால் மரகதத்தின் உடலையும், தினேஷையும் மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் வந்து காரை வெட்டி தினேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கும், மரகதத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications