பாம்பன் ரயில் பாலம் சீரமைப்பு பணி: சேதமடைந்த தூண் வெடி வைத்து தகர்ப்பு

கடந்த 9ம் தேதி பாம்பன் கடல் பகுதிக்கு வந்த 2 கப்பல்கள் பலத்த காற்று வீசியதால் பாறையில் சிக்கி நின்றன. அவற்றை உடனடியாக விசைப்படகுகள் மூலம் பாம்பன் துறைமுக அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், கடந்த 13ம் தேதியன்று காற்றின் வேகம் அதிகரிப்பால் பாறையிலிருந்து விலகிய கடற்படை கப்பல் பாம்பன் ரயில் பாலத்தின் இரும்பு கர்டர்களை தாங்கி நிற்கும் 121வது தூண் மீது பலமாக மோதியதில் தூண் நகர்ந்து பாலம் சேதமடைந்தது. இதனையடுத்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோதிய கடற்படை கப்பலை 6 விசைப்படகுகள் உதவியுடன் இழுத்து மீனவர்கள் ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
சீரமைப்பு பணி தீவிரம்
பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் வரை ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பாலத்தை சரி செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரும்பு கிரில்களை கொண்டு தற்காலிக தூண் அமைக்கப்பட்டுள்ளது.
சேதம் அடைந்த தூணும் உடைக்கப்பட்டு வருகிறது. இன்று காலை சேதமடைந்த அந்த தூணை வெடிகுண்டு வைத்து தகர்க்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் வெடிகுண்டால் கூட அந்த தூணை முழுமையாக தகர்க்க முடியவில்லை. பாதிதான் தகர்க்க முடிந்தது. எனவே மீண்டும் கடப்பாறையால் இடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூணில் பணிகள் நடைபெற்று வருவதால் ராமேஸ்வரம் செல்லும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (19-ந்தேதி) புவனேஸ்வரம் -ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண்-18496) திருச்சியுடன் நிறுத்தப்படும். இந்த ரயில் 19-ந்தேதி மட்டும் திருச்சி-ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதினம் ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் செல்லும் விரைவு ரெயில் (எண்.18495) திருச்சியில் இருந்து புறப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் நாளை பாம்பன் பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். அதன்பின்பு ரயில் என்ஜின் சோதனை நடத்தப்படுகிறது. அதன்பிறகு சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பிறகு பயணிகள் இல்லாமல் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
மீண்டும் மோதும் ஆபத்து
இதனிடையே பாம்பன் கடல் பகுதியில் பாறை மீது மோதி 8வது நாளாக நிற்கும் இழுவைக் கப்பலை மீட்பதற்கு கப்பலில் உள்ளவர்களோ, கப்பலின் ஏஜெண்டுகளோ, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
எனவே பாலத்தின் மீது மீண்டும் ஒரு கப்பல் மோதும் சம்பவம் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்கு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications