சுஷ்மாவைத் தலைவராக்க முயன்ற அத்வானிக்கு ஆர்எஸ்எஸ் 'நோஸ் கட்'... மீண்டும் கத்காரியே தலைவராகிறார்
டெல்லி: சுஷ்மா சுவராஜை எப்படியாவது பாஜக தலைவராக்கி விட வேண்டும் என்று தீவிரமாக முயன்ற மூத்த தலைவர் அத்வானிக்கு ஆர்.எஸ்.எஸ். முட்டுக்கட்டை போட்டு விட்டது. தற்போதைய தலைவர் நிதின் கத்காரியே மீண்டும் தலைவராவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறி விட்டது.
ஆர்.எஸ்.எஸ்.ஸிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்து விட்டதைத் தொடர்ந்து ஜனவரி 23ம் தேதி வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார் கத்காரி.
கத்காரி மீண்டும் தலைவராவதை அத்வானி விரும்பவில்லை. மாறாக, தனது சிஷ்யையான சுஷ்மா சுவராஜை தலைவராக்க அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இதை ஆர்எஸ்.எஸ் நிராகரித்து விட்டது. ஒரு வேளை சுஷ்மாவைத் தலைவராக்க முடியாவிட்டால் ரவி சங்கர் பிரசாத்தை தலைவராக்கலாம் என்றும் அத்வானி யோசனை தெரிவித்திருந்தார்.
ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ். தலைமை நிராகரித்து விட்டது. கத்காரியே மீண்டும் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் முடிவு. அதில் எந்த மாற்றமும் கிடையாது, அது இறுதியான ஒன்று என்று ஆர்.எஸ்.எஸ். திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால் அத்வானி முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து கத்காரி ஜனவரி 23ம் தேதி மனுத் தாக்கல் செய்யவுள்ளார். ஆர்.எஸ்.ஆஸ். ஆதரவு பலமாக உள்ளதால் அவர் ஒருமனதாக 2வது முறையாக தலைவராவது உறுதியாகி விட்டது.












Click it and Unblock the Notifications