ஐடி துறைக்கு 'கடலை' ராமலிங்கம் 46 கேள்வி...பதிலளிக்காவிட்டால் 'கேஸ்' போடுவதாக எச்சரிக்கை!
தாராபுரம்: எனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முறைகேடானது. அது ஒரு சதி வேலை என்று கூறியுள்ள திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம், வருமான வரித்துறைக்கு 46 கேள்விகளைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனக்கு வருமான வரித்துறை உரிய பதிலை அனுப்பாவிட்டால் வழக்குப் போடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தாராபுரம் உப்புத்துறை பாளையம் நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம் வீட்டில் கடந்த மாதம் 31-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ. 27 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்காக கடந்த 4-ந்தேதி ராமலிங்கம் சென்னை சென்றார். பின்னர் 11-ந்தேதி மறு விசாரணைக்கு வருமாறு அவரிடம் வருமான வரித்துறையினர் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் ராமலிங்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க கருவூல பத்திரம் போலியானது என்று அமெரிக்க பார்க்லேஸ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து 11-ந்தேதி சென்னையில் ராமலிங்கத்திடம் நடத்தப்பட இருந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ராமலிங்கம் தன்னிடம் ரூ. 27 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள பத்திரம் இருப்பதாக கூறி சுய விளம்பரம் தேடிக் கொண்டார் என போலீஸ் மூலம் வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

முன்ஜாமீன்
இதைத் தொடர்ந்து ராமலிங்கம் அந்த வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் பெற்றார். கடந்த 21-ந்தேதி வரை முன்ஜாமீன் பெற்றிருந்த அவர் மீண்டும் 28-ந்தேதி வரை முன்ஜாமீனை நீட்டித்து அனுமதி பெற்றார்.

வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் அவர் சென்னை வருமான வரித்துறை பொது இயக்குனருக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். தனது வக்கீல் இளங்கோவுடன் தாராபுரம் தலைமை தபால் நிலையத்துக்கு வந்த ராமலிங்கம் பொது இயக்குனருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை
எனது வீட்டில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நுழைந்து பலகோடி மதிப்புள்ள ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். தொடர்ச்சியாக எனது வங்கிக் கணக்குகளையும் முடக்கினர். இதனால் எனது அன்றாட குடும்பச் செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

வங்கி லாக்கரை திறக்க அனுமதி இல்லை
வங்கி லாக்கரை திறக்க பலமுறை அனுமதி கேட்டும் எந்தவித பதிலும் இல்லை. அடுத்த 7 நாட்களுக்குள் என்னிடமிருந்து கைப்பற்றிய அனைத்து ஆவணங்களையும் எந்தவித சேதாரமுமின்றி எனது இருப்பிடத்திற்கு வந்து ஒப்படைத்து விட்டு என்னிடம் ஒப்புகை ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். இதை செய்யத் தவறினால் வருமான வரித்துறை மீதும் எனது வீட்டில் சோதனை நடத்திய 25 அதிகாரிகள் மீதும் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பேன்.

46 கேள்விகள்
தனது கடிதத்தில் 46 வகையான கேள்விகளையும் ராமலிங்கம் எழுப்பியுள்ளார். தனது வீட்டில் சோதனை நடந்தபோது 6 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் வந்தனர் என்றும், இப்படிப்பட்ட சோதனையின்போது இத்தனை அதிகாரிகள் சோதனை நடத்தியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்ஜ் இல்லாமல் வந்த போலீஸார்
சோதனையின் போது அதிகாரிகளுடன் வந்த ஆயுதம் தாங்கிய போலீசார் தங்கள் பெயர் பதிக்கப்பட்ட பேட்ஜ் அணியவில்லை என்றும், அது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

திட்டமிட்ட சதி
சோதனைக்கு வந்த அதிகாரிகள் தன்னிடம் அடையாள அட்டையை காட்டவில்லை என்றும் இந்த நடவடிக்கை தன் மீது திணிக்கப்பட்ட திட்டமிட்ட சதி என்றும் ராமலிங்கம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications