மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனே அகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தையும் உடனே அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மெரினா கடற்கரை உள்ளது. அங்கு காற்று வாங்க வருபவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், கடல் அடலையில் விளையாடும் சிறியவர்கள், காதலர்கள் என்று ஆள்நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் சென்னைவாசிகள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து பொழுதை கழிப்பதால் கூட்டம் நிரம்பி வழியும்.
கடற்கரையில் நொறுக்கு தீனி கடைகள் ஏராளமாக உள்ளன. அதனால் மக்கள் அக்கடைகளில் பண்டங்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரையில் குப்பை சேர்கிறது. அவற்றை அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் குப்பை சேர்கிறது. இதனால் கடற்கரையின் அழகு கெடுகிறது.
இந்நிலையில் மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்கக் கோரி காந்திஜி நுகர்வோர் அமைப்பு சென்னை உயர் நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், வியாபாரம் என்ற பெயரில் மெரினா கடற்கரை அசுத்தமாக்கப்படுகிறது என்றும், இதற்கு காரணமான கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளையும் உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications