ரஜினி பட ஸ்டைலில் சிபிஐ அதிகாரி போல் நடித்து பணம் பறித்த அரசு ஊழியர்
மும்பை: மகாராஷ்டிரா மாநில நீர் பாசனத் துறை அலுவலகத்தில் ஜூனியர் கிளர்க்காக இருக்கும் சுதிர் காத்சே என்பவர் சூப்பர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து சிபிஐ அதிகாரி போல் நடித்து பலரிடம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசின் நீர்பாசனத் துறை அலுவலகத்தில் ஜூனியர் கிளர்க்காக இருப்பவர் சுதிர் காத்சே(36). நாசிக்கில் வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் டாக்டர் விஜய்குமார் கவிட்டின் உதவியாளர் தங்கியிருக்கும் மும்பை மரைன் டிரைவ் ரெசிடன்ஸுக்கு சென்றுள்ளார். அங்கு தான் ஒரு சிபிஐ(ஊழல் தடுப்பு மற்றும் வருமான வரி பிரிவு) அதிகாரி என்றும், கவிட்டின் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த ஆவணங்கள் முறையாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையைத் தீர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்போது தான் அவர் போலீசில் சிக்கினார். விசாரணையில் அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலி சிபிஐ அதிகாரியாக ஒரு வீட்டுக்கு செல்லும் படத்தைப் பார்த்தேன். நாமும் ஏன் அவரைப் போன்று நடித்து பணம் சம்பாதிக்கக்கூடாது என்று நினைத்து இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
சுதிர் பல அதிகாரிகளின் வீட்டு முகவரிகளை வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரி வீட்டில் இல்லை என்றால் தான் அங்கு சென்று அவரின் குடும்பத்தாரை மிரட்டி பணம் வாங்குவாராம். மும்பை தவிர அவர் ஜால்காவ்ன், புனே உள்ளிட்ட பிற இடங்களுக்கும் சென்று சிபிஐ அதிகாரி போல் நடித்து போட்டு பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சுதிர் கைதான விவரம் அறிந்த அரசு அதிகாரி ஒருவர் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த மார்ச் மாதம் சுதிர் காத்சே வருமான வரித்துறை அதிகாரி போன்று வந்து எங்கள் வீட்டில் இருந்து ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications