ராமநாதபுரம்: தங்க சங்கிலிக்காக தாயை வெட்டிக் கொன்ற மகன்கள்.. தங்கைக்கும் அரிவாள் வெட்டு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச் சங்கிலி பிரச்சினையில் பெற்ற மகன்களே தாயை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சிப்புளி அருகே உள்ள நத்தகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 53). இவரது மனைவி மலையம்மாள் (46). இவர்களுக்கு சிவமூர்த்தி (29),விக்னேஸ்வரன் (26) மலையரசன் (15) ஆகிய மகன்களும் மலைராணி (17) என்ற மகளும் உள்ளனர். சிவமூர்த்தி, விக்னேஸ்வரன் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மலையரசன், மலைராணி ஆகியோர் பெற்றோருடன் வசிக்கின்றனர்.
விக்னேஸ்வரன், வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில்தான் ஊருக்கு திரும்பினார். அப்போது தங்கை மலைராணிக்கு தங்கச் சங்கிலி வாங்கி வந்தார். அதனை மலைராணி எப்போதும் கழுத்தில் அணிந்திருப்பார்.
சில தினங்களுக்கு முன் அந்த சங்கிலியை விக்னேஸ்வரன் வாங்கி பார்த்த போது அது கவரிங் போல தெரியவே அது குறித்து விவரம் கேட்டுள்ளார். மலைராணி, தனக்கு பழக்கமான சிவக்குமாருக்கு நகையை கழற்றி அடகு வைத்து கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் இது யாருக்கும் தெரியாமல் இருக்க கவரிங் நகையை வாங்கி அணிந்திருந்ததாகவும், மலைராணி தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன் தங்கையை கடுமையாக கண்டித்துள்ளார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போது கார்மேகம், மலையம்மாள், மலைராணி மற்றும் மலையரசு ஆகிய நால்வரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது நள்ளிரவு அங்கு வந்த சிவமூர்த்தி மற்றும் விக்னேஸ்வரன் அனைவரையும் சராமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் மலையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்மேகம், மலைராணி, மலையரசு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மலையம்மாள் சடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார்மேகம் மற்றும் மலைராணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் தப்பியோடிய விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டார். சிவமூர்த்தியை போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications