சுவிஸ் வங்கியில் பணம்: சட்டசபையில் அதிமுக புகார்.. முந்தைய ஆட்சி என்றால் அதிமுகவா?- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: சட்டசபையில் பேசிய விராலிமலை அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்ததாக பரபரப்பு குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்...

விஜயபாஸ்கர்: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வரும் 20ம் தேதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது, முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. கருணாநிதி கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

(கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசியதற்கு திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.)

அம்மாவின் பெயரை சொல்லி இருக்கிறார்கள்:

அமைச்சர் வைத்திலிங்கம்: கடந்த ஆட்சியிலும் சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் பேசும்போது அம்மாவின் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்காக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி கட்சி உடனே மத்திய ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும்

அமைச்சர் முனுசாமி: எந்த கருத்தையும் உறுப்பினர் தவறாக பேசவில்லை. கருணாநிதி கட்சி என்றுதான் குறிப்பிட்டார். திமுகவில் கருணாநிதி உறுப்பினராக இருக்கிறாரா? இல்லையா?.

மு.க.ஸ்டாலின் (திமுக): முன்னாள் முதல்வரின் பெயரை குறிப்பிட்டு உறுப்பினர் பேசினார். அதுபோல நாங்களும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா? கடந்த ஆட்சியில் சில உறுப்பினர்கள் அதிமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசியபோது, அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இப்போதும் அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்: கடந்த ஆட்சியில் திமுக உறுப்பினர்கள் அம்மா பெயரை குறிப்பிட்டு பேசியபோது ஒருமுறை நீக்கினார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் 100 தடவைக்கு மேல் அம்மா பெயரை குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை இப்போதும் அவைக் குறிப்பில் உள்ளன.

மானம் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும்:

விஜயபாஸ்கர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான உடனேயே மத்திய அரசில் இருந்து திமுக ராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இதுவரை தமிழகத்திற்கு செய்த துரோகத்திற்கு பிராயசித்தமாக இருந்திருக்கும். மானம் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும். இவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை.

(இதற்கு திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்)

சுவிஸ் வங்கியில் பணம்...:

விஜயபாஸ்கர்: முந்தைய ஆட்சியாளர்கள், ‘‘மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப கடந்த ஆட்சிக் காலத்தில் தம் மக்கள் நலத்தை கணக்கில் கொண்டார்களே தவிர, மக்கள் நல்வாழ்வைப் பற்றி அவர்கள் மறந்தும் சிந்தித்தது கிடையாது. சுவிஸ் வங்கியில் கணக்கை அதிகரிப்பதிலேதான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

(இதற்கு திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார்)

அமைச்சர் கே.பி.முனுசாமி: அவையில் சபாநாயகர் எழுந்து நின்றால், உறுப்பினர்கள் உட்கார வேண்டும் என்பது விதி. ஆனால், நீங்கள் எழுந்து நின்ற பிறகும் திமுக உறுப்பினர்கள் உட்காரவில்லை. அவர்கள் கட்சித் தலைவர் சொன்னால்தான் உட்காருகிறார்கள். அவர்களுக்கு ஏன் பேசுவதற்கு வாய்ப்புத் தர வேண்டும்?

மு.க.ஸ்டாலின்: முந்தைய ஆட்சியாளர்கள் பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டை உறுப்பினர் சுமத்துகிறார். எனவே, இதுதொடர்பான அவரது பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

உங்கள் ஆட்சி என்று குறிப்பிடவில்லை-சபாநாயகர்:

சபாநாயகர்: கடந்த ஆட்சி என்றுதான் உறுப்பினர் சொன்னார். உங்கள் ஆட்சி என்று குறிப்பிடவில்லை.

விஜயபாஸ்கர்: சுவிஸ் வங்கியில் இல்லை என்றால், வேறு எந்த வங்கி என்று சொல்ல வேண்டும்?.

இதற்கு மு.க.ஸ்டாலின் எழுந்து விளக்கம் சொல்ல முயன்றார். ஆனால், வாய்ப்பு தரப்படவில்லை. இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

முந்தைய ஆட்சி என்றால் அதிமுகவா?-ஸ்டாலின் கேள்வி:

வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், திமுகவினர் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்ற முடிவோடு அதிமுகவினர் பேசுகின்றனர்.
அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் தவறான கருத்தைச் சொல்லி அவையில் பதிய வைக்கிறார்கள். அதை அவை குறிப்பில் இருந்து நீக்கச் சொன்னால் நீக்க மறுக்கிறார்கள்.
ஜனநாயகமே படுகுழிக்கு செல்லும் வகையில் பேரவை நடைபெறுகிறது.

முந்தைய ஆட்சியாளர்கள் ஸ்விஸ் வங்கியின் பணம் போட்டுள்ளார்கள் என்று பேசினார்கள். அதற்கு நான் பதிலளிக்க அனுமதி கேட்டேன். ஆனால், அனுமதி தரவில்லை. சபாநாயகர் இதற்கு பதில் தந்து பேசும்போது கடந்த ஆட்சி என்றுதான் உறுப்பினர் சொன்னார். உங்கள் ஆட்சி என்று குறிப்பிடவில்லை என்றார்.

அப்படியென்றால் கடந்த திமுக ஆட்சிக்கு முன் அதிமுக ஆட்சி தான் இருந்தது. அந்த ஆட்சியாளர்களைத் தான் அதிமுக எம்எல்ஏ சுவிஸ் வங்கியோடு முடிச்சு போட்டு பேசினாரா?.

அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் தவறான கருத்தைச் சொல்லி அவையில் பதிய வைக்கிறார்கள். அதை அவை குறிப்பில் இருந்து நீக்கச் சொன்னால் நீக்க மறுக்கிறார்கள்.

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், காவிரி பிரச்சனை பற்றி பேச எங்களுக்கு உரிமை இல்லை என்கிறார். அனைத்து உரிமைகளும் எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் திமுக ஆட்சியில்தான் 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றோம்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது நடுவர் மன்றத்தை அமைக்க காரணமாக இருந்தவரே திமுக தலைவர் கருணாநிதி தான் என்றார்.

உங்களை விட அதிக தகுதி எங்களுக்கு இருக்கிறது:

முன்னதாக காவிரி விவகாரம் குறித்து சட்டசபையில் நடந்த விவாதம்...

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: டெல்டா பிரச்சனை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உறுதி செய்திடும் வகையில் அதை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று 2007ம் ஆண்டு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக இந்த பிரச்சனை என்ன செய்தது? காவிரி பிரச்சனையில் திமுக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. எனவே, டெல்டா பாசன பிரச்சனை பற்றி பேச திமுகவுக்கு அருகதையே இல்லை.

காவிரி டெல்டா பகுதியின் விவசாயிகள் மரணத்துக்கு பல காரணங்கள் உள்ளன. டெல்டா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின்: டெல்டா விவசாயிகள் பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதோ, அதைவிட அதிக தகுதி எங்களுக்கு இருக்கிறது.

கோடி கோடியாக பணம் சம்பாதிக்க தொலைத்தொடர்புத் துறை:

அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்: கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மத்திய தொலைத்தொடர்புத் துறையை கேட்டு வாங்கினீர்களே, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசிடம் கேட்டிருக்கலாமா? காவிரி பிரச்சனையில் இன்று வரை நீங்கள் துரோகம் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவே, இந்த பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை.

(அப்போது ஸ்டாலின் எழுந்து வைத்திலிங்கத்தின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டசபையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ய நேரிடும் என்றார். ஆனால், சபாநாயகர் ப.தனபால் அதற்கு பதில் அளிக்கவில்லை)

இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த, அவர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர். இதைத்தொடர்ந்து, அவை காவலர்கள் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+