காவிரி நீரை திறந்துவிட்டால் வன்முறைதான்.: கன்னட அமைப்புகள் எச்சரிக்கை! கே.ஆர்.எஸ்.-ல் 144 தடை!
மாண்டியா: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டால் வன்முறை வெடிக்கும் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருகும் சம்பா பயிரைக் காப்பாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் 2.44 டி.எம்.சி. நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசோ சட்ட ரீதியான மேல்முறையீட்டுக்கு மும்முரம் காட்டி வருகிறது.
இதேபோல் கர்நாடகாவின் மாண்டியா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவரான மாதேகவுடா, நாங்கள் ஒன்றும் மழைக் கடவுளான வருண பகவான் இல்லை...கிருஷ்ணராஜசாகர் அணையிலே தண்ணீரே இல்லை.. எப்படி திறக்கிறது.. இருக்கிற தண்ணீரை திறந்துவிட்டா அது மேட்டூரைக் கூட சென்றடையாது என்றார் அவர்.
இதேபோல் மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான புட்டண்ணையா கூறுகையில், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டால் அது வன்முறை புரட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், இந்தியாவின் வரைபடத்தில் கர்நாடகாவும் ஒரு மாநிலம் என்பதை மத்திய அரசு மறந்துவிட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறை பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் அவர்,
இதைத் தொடர்ந்து கிருஷ்ணராஜசாகர் அணையை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அணைப் பகுதியில் எவரும் நுழைய முடியாது.












Click it and Unblock the Notifications