பலத்த எதிர்ப்புக்கிடையே திருப்பதியில் சாமி கும்பிட்ட ராஜபக்சே!

ரேணிகுண்டா விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 6.40மணிக்கு திருமலைக்கு வந்தார் ராஜபக்சே.
அவரை திருப்பதி கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, சித்தூர் கலெக்டர் சாலமேன், ஆரோக்கியராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் பாபு மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். இரவு அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு ராஜபக்சே குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அங்கு சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 4.15 மணி வரை அவர் கோவிலில் இருந்தார். தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள கொடிகம்பத்தை தொட்டு வணங்கினார். கோவில் ரங்கநாயகர் மண்டபத்தில் ராஜபக்சேவுக்கு கோவில் அதிகாரிகள் பட்டு வஸ்திரம் அணிவித்தனர்.
லட்டு பிரசாதங்கள் வழங்கினர். திருப்பதி தேவஸ்தான காலண்டர், டயரிகளையும் வழங்கினர்.
பின்னர் அங்கிருந்து காலை 9.30 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் ரேணிகுண்டா சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
ராஜபக்சே வருகையையொட்டி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி திருமலை வரை வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மதிமுக இன்றும் ஆர்ப்பாட்டம்...
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை ஜி.என்.சி. டோல்கேட், பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் ம.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் ராஜபக்சேயின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அவரை கண்டித்து கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications