தொடங்கியது 2 நாள் பந்த் - தமிழகத்தில் பாதிப்பில்லை: பஸ், ஆட்டோ ஓடியது

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வங்கிகள், இன்சூரன்ஸ், போக்குவரத்துப் பிரிவினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் நாடு முழுவதும் இவற்றின் சேவை பரவலாகப் பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு பிரதமர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தும் அதை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ரூ. 15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என அசோசெம் அமைப்பும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் உள்பட அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே வங்கிச் சேவை நாடு தழுவிய அளவில் பாதிக்கப்பட்டது.
கேரளாவில் முழு பாதிப்பு
கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பஸ் போக்குவரத்து கிட்டத்தட்ட முற்றிலும் பாதிக்கப்பட்டது.
நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தால் கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து, வங்கி சேவைகள் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கியது.
கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தம்-மக்கள் பாதிப்பு.
தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துக்கள் அணைத்தும் நிறுத்தப்பட்டன. மேலும் தமிழகத்திற்கு அம்மாநில பேருந்துக்களும் இரவோடு இரவாக,கேரளா நோக்கி சென்றன. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை முதலே கேரளாவுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கேரளா எல்லை பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
பலர் ஆட்டோக்கள் மூலம் செங்கோட்டை வழியாக ஆரியன்காவு சென்று அங்கிருந்து ஜீப் மூலம் புனலூர் சென்று ரயில் மூலம் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.அத்தியாவசிய பொருட்களும் கேரளாவுக்கு செல்லாததால் அம்மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
தமிழகத்தில் பாதிப்பில்லை
தமிழகத்தில் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்கள் மற்றும் லாரிகள் வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் ஓடின. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. பள்ளிகளும் இயங்கின.
திருப்பூரில் பனியன் உற்பத்தி பாதிப்பு:
நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், தேவாலா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.
இந்த வங்கிகளில் பெரும்பாலானவை இன்று செயல்படவில்லை. இங்குள்ள ஏ.டி.எம்.சென்டர்களில் போதிய அளவு பணம் இல்லை. இதனால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். குன்னூரில் உள்ள தேயிலை மையம் இன்று செயல்படவில்லை.
இதனால் பல கோடி ரூபாயிலான வர்த்தகம் முடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக திருப்பூரில் இன்று பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.
பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், பேக்கரிகள் மூடிக் கிடந்தன. வேலை நிறுத்தத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பனியன் நிறுவனங்களும் பங்கேற்றன. தொழிலாளர்கள் யாரும் இன்று வேலைக்குச் செல்லவில்லை. பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு விற்பனை மற்றும் பனியன் கம்பெனிகள், சிறுகுறு பனியன் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை.
எதற்காக பந்த்...?
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து வேலைகளிலும் தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், முறைப்படுத்தப்படாத பிரிவு தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் கிடைக்க வகை செய்ய வேண்டும், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச கூலியை மாதம் ரூ. 10,000 என்று உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இந்த் பந்த் நடக்கிறது.
ஹரியானாவில் ஏஐடியுசி பொருளாளர் கொலை:
ஹரியானா மாநிலத்தில் ஏஐடியுசி தொழிற்சங்க பொருளாளர் இன்று அதிகாலை 4 மணிக்கு கொலை செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள பஸ் டிப்போவில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு பஸ்ஸை எடுக்க ஓட்டுநர்கள் முயன்றுள்ளனர். இன்று தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் என்பதால் பஸ்ஸை எடுக்கவிடாமல் ஏஐடியுசி தொழிற்சங்க பொருளாளரும், பஸ் டிரைவருமான நரேந்திர சிங் தடுத்துள்ளார்.
அப்போது அவரையும் மீறி எடுக்கப்பட்ட பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து பிற ஊழியர்கள் அம்பாலா துணை கமிஷனரின் வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த டிப்போ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications