For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெஜட்டில் காவிரி தீர்ப்பு: இது தான் என் 30 ஆண்டு அரசியல் வாழ்விலேயே மாபெரும் சாதனை- ஜெயலலிதா.

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: காவிரி் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு இன்று கெஜட்டில் (அரசிதழ்) வெளியிட்ட இந்த நாள் தான், எனது 30 வருட அரசியல் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இன்று காவிரி் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

இது கடந்த 22 ஆண்டு காலமாக நான் இடைவிடாது நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இந்தச் செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது.

நான் 1991ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதன்முதலாக முதல்வராக பொறுப்பேற்றேன். 21ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அப்போதே அதை கர்நாடகம் எதிர்த்தது. அந்த ஆணையை செயல்படுத்த முடியாதவாறும், செயலற்றுப் போகும் வகையிலும் சட்டம் ஒன்றை இயற்றியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன். இதையடுத்து அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாவை விசாரிக்க ஒரு நடுவர் மன்றத்தை அமைக்கும்போது, அந்த நடுவர் மன்றம் தரும் தீர்ப்பை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமானால் அதை மத்திய அகசு அதை கெஜட்டில் வெளியிட வேண்டும்.

ஆனால், அதை அப்போது இருந்த மத்திய அரசாங்கம் கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பிறகு என்னுடைய முயற்சியின் காரணமாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைவிடாது எடுத்த முயற்சியின் விளைவாக 91ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆனால் அதையும் கர்நாடக அரசு மதிக்காமல் தொடர்ந்து காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை திறந்து விட மறுத்து வந்தது. இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கு மத்திய அரசும் ஏற்பாடு செய்யவில்லை.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். நானும் சென்னை மெரினா கடற்கரையில் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். இதையடுத்து அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த சுக்லா சென்னைக்கு வந்து இடைக்காலத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். இதைத் தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நான் அதை வாபஸ் பெற்றேன்.

ஆனாலும் காவிரி நதிநீர் நமக்கு போதிய அளவு வழங்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து 4 அணைகளும் நிரம்பிய பிறகு வரும் உபரி நீர் மட்டும்தான் தமிழகத்திற்கு கிடைக்கும் நிலை இருந்தது. இதற்காக பல்வேறு வழக்குகளை திரும்ப திரும்ப உச்ச நீதிமன்றத்தில் நாம் தொடுத்ததின் விளைவாக காவிரி நதி நீர் ஆணையமும் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன.

இதுமட்டுமல்ல கடந்த 9 ஆண்டுகளாக காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை மத்திய அரசு கூட்டவில்லை. 2011ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தியும் மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. வேறு வழியின்றி ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு பிறகுதான் காவிரி நதி நீர் ஆணைய கூட்டமே கூட்டப்பட்டது. அந்த ஆணையம் வழங்கிய உத்தரவையும் கர்நாடகம் மதிக்கவில்லை. நமக்கு உரிய தண்ணீரை தரவில்லை.

பின்னர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் வந்தது. இதையடுத்து இடைக்கால ஆணை தற்போது இல்லை, இறுதி ஆணையும் செயல்படவில்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடகா கூறியது.

இதனால் ஆணையை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரினேன். ஆனால், மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி மீண்டும் மீண்டும் போராடி இன்று வெற்றி பெற்றிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் கிடைத்த மகத்தான, பிரம்மாண்டமான வெற்றி இதுவே என்று கூறலாம். என்னுடைய 30 ஆண்டு கால அரசியல் பொது வாழ்வில் இன்று தான் சாதனை புரிந்ததாக நான் மன நிறைவடைகிறேன்.

நான் எவ்வளவோ சாதனைகள் செய்ததாக எத்தனையோ பேர் பாராட்டினாலும் அவற்றையெல்லாம் நான் சாதனையாக கருதவில்லை. இதைத்தான் மகத்தான சாதனையாக கருதி நான் மனநிறைவு கொள்கிறேன். எனக்கும் எனது தலைமையிலான அரசுக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது.

இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. இனி காலாகாலத்திற்கும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி காவிரி நீரை கர்நாடகா கட்டாயம் திறந்துவிட வேண்டும். மத்திய அரசிதழில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பதால் இது நிச்சயம் கர்நாடகாவை கட்டுப்படுத்தும்.

அணைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது ஆண்டுதோறும் நமக்கு தேவையான அளவு தண்ணீரை அவர்கள் திறந்து விட வேண்டும். போதிய மழை இல்லாவிட்டால் இருக்கிற நீரை இந்த தீர்ப்பின் படி பகிர்ந்து பெறுவோம்.

இனிமேல் கர்நாடகம் தமிழகத்தை ஏமாற்ற முடியாது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளது என்றார் ஜெயலலிதா.

English summary
As the Centre notified Cauvery tribunal award in gazette, TN chief minister Jayalalitha has said it is the happiest day in her political life
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X