நெருக்கடி தரும் திமுக- ஆ.ராசா.. குழப்பத்தில் காங்கிரஸ்: ஜேபிசியின் புது ரூட்டு!

2ஜி விவகாரத்தில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி ஜேபிசியிடம் அளித்த வாக்குமூலம் மூலமாக தவறு அனைத்தும் ராசா மீது மட்டுமே என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை உடைக்க ராசாவும் திமுக தலைமையும் விரும்புகின்றன. இதனால் இது தொடர்பாக ஜேபிசி முன் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று ராசா கோரி வருகிறார். அவர் ஆஜரானால், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் இழுத்துவிட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது.
இதனால், அவரை ஆஜராக விட காங்கிரஸ் தரப்பு தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இந் நிலையில், இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டு தான், டெசோ மூலமாக இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நமக்கு திமுக குடைச்சல் கொடுக்கிறதோ என்ற சந்தேகமும் காங்கிரசிடம் உள்ளது.
இதனால், 2ஜி விவகாரத்தில் திமுக-ராசாவின் கோரிக்கைக்கு பணிய வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது.
இந் நிலையில், ராசாவை நேரில் ஆஜராக விட்டால் அவரிடம் ஜேபிசியில் உள்ள பாஜக, இடதுசாரி எம்பிக்கள் ஏடாகூடமாக கேள்விகளைக் கேட்டு, அதற்கு ராசாவும் ஏடாகூடாமாக ஏதாவது சொல்லி வைத்துவிட்டால், நிலைமை மோசமாகுமே என்றும் காங்கிரஸ் அஞ்சுகிறது.
இதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பதை எழுத்துப்பூர்வமாக தரவும் என்று ஜேபிசி தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த பி.சி.சாக்கோ மூலம் ராசாவுக்கு தகவல் தரப்படலாம் என்று தெரிகிறது. அதில், வாகானவதியின் குற்றச்சாட்டுகளுக்கு உங்களது பதில்களை எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கவும் என்று கூறப்படலாம் என்கிறார்கள்.
தன்னை ஜேபிசி முன் ஆஜராக விடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ராசா மிரட்டி வருவதும், திமுக தலைமையின் அனுமதியில்லாமல் ராசா இவ்வாறு கூறியிருக்க வாய்ப்புக்கள் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராசாவை ஏன் விசாரணைக்கு அழைக்க மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராசாவுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு உள்ளது. இதனால் அவர் யார் முன்பும் ஆஜராகி பேசுவதோ, புதிய குற்றச்சாட்டுகளை சொல்வதோ சட்டப்படி செல்லாது. இதனால் அவரை விசாரணைக்கு அழைப்பதால் பயனில்லை என்கிறாராம் சாக்கோ.












Click it and Unblock the Notifications