திருப்பூரில் குழந்தையை பெற்று குப்பைத் தொட்டியில் வீசிய 10ம் வகுப்பு மாணவி
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆண் குழந்தை பெற்று அதை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்து குழந்தை அழும் சத்தம் வந்தது. இந்த சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து குப்பைத் தொட்டியில் பார்த்தபோது தொப்புள் கொடியுடன் அழகிய ஆண் குழந்தை கிடந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தூக்கிச் சென்றனர்.
அப்போது காவல் நிலையத்திற்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாயுடன் வந்தார். அவர்கள் கூறுகையில், குழந்தையை நாங்கள் தான் குப்பைத் தொட்டியில் போட்டோம். அதை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவரின் மகள் தான் அந்த மாணவி. திருப்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறையின்போது நெல்லையில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்ற இடத்தில் அத்தை மகனுடன் உறவு ஏற்பட்டு கர்ப்பமாகியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு வீட்டில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மறைக்க நினைத்த அவரும், அவரது தாயும் சேர்ந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டனர். இது குறித்து அறிந்த அந்த பெண்ணின் தந்தை போலீசார் விசாரணையில் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள் போய் குழந்தையை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளார்.
அந்த குப்பைத் தொட்டிக்கு வந்து பார்த்தபோது குழந்தை இல்லாததால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது போலீசார் குழந்தையை தூக்கிச் சென்றதை அறிந்து காவல் நிலையத்திற்கு வந்து குழந்தையை கேட்டார். அவரிடமும், அவரது பெற்றோரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு குழந்தையை கொடுத்தோம் என்றனர்.
முன்னதாக கடந்த 7ம் தேதி அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அவரை கர்ப்பமாக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications