தங்கபாலு மீது கல்வீச்சு, காங். நிர்வாகி மண்டை உடைப்பு -தமிழ் உணர்வாளர்கள் ஆவேசம்

திலீபன், ஜோசப் பிரிட்டோ, பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப் பிரியன், அந்தோணி ஜார்ஜ், லியோ ஸ்டாலின் ஆகிய 8 லயோலா கல்லூரி மாணவர்களும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் உள்ள செங்கொடி அரங்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு பெரும் ஆதரவு திரண்டு வருகிறது. மேலும் வைகோ தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் மாணவர்களைப் பார்க்க வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று 3வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று பழ. நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் வந்து பார்த்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
திமுக எம்.பிக்கு எதிர்ப்பு
அதேபோல திமுகவைச் சேர்ந்த எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோ டெசோ அமைப்பைச் சேர்ந்தவர்களும் வந்து பார்த்துப் பேசினர். அப்போது இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் குரல் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் இளங்கோவன் உள்ளிட்டோர் மாணவர்களை அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் அமைதி நிலவியது.
தங்கபாலுவுக்கு கடும் எதிர்ப்பு
இந்தநிலையில் நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் உட்பட 10 பேர் வந்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பந்தலுக்குள் வரக்கூடாது என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி காங்கிரசார் பந்தலை நோக்கி சென்றனர்.அப்போது மாணவர்கள் அவர்களை வாசலில் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கூட்டத்திலிருந்து தங்கபாலுவை நோக்கி கற்கள், குடிநீர் பாட்டில், புத்தகம், வெங்காயம் போன்றவை வீசப்பட்டன. அதில் தங்கபாலுவுடன் வந்த மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் மண்டையில் கல் வீசப்பட்டத்தில் மண்டை உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனாலும் போகாத தங்கபாலு, உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்களை பார்த்துவிட்டு தான் செல்வேன் என்று விடாப்பிடியாக இருந்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் இடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்களை பார்க்க அனுமதிக்க முடியாது, மீறி சென்றால் கைது செய்வோம் என்று போலீசார் கூறினர். மாணவர்களிடமும் தங்கபாலு பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் ஏற்படாததால் அங்கிருந்து போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழன் என்ற முறையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை பார்த்து அவர்களுடைய கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்க வந்தேன். ஆனால் மாணவர்கள் போர்வையில் வன்முறை கும்பல் உண்ணாவிரத பந்தலுக்குள் வரக்கூடாது என்று எங்களை தடுத்ததுடன், கற்களையும், புத்தகம், குடிநீர் பாட்டில், வெங்காயம் போன்றவற்றையும் வீசி தாக்கினர். இதில் தாமோதரன் மண்டை உடைந்தது.
நான் இவர்களை சந்தித்து பேசாமல், வேறு யார் வந்து இவர்களை சந்தித்து பேசுவார்கள்? கற்களை தூக்கி வீசி காயப்படுத்துவதா ஜனநாயகம்? இதனை போலீசாரும் வேடிக்கை பார்த்தது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும். காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது நல்லதல்ல.
இலங்கை பிரச்சினையை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தியால் தான் தீர்க்க முடியும். எங்களுடைய கூட்டணி கட்சியை சேர்ந்த திமுக எம்.பி. வந்த போது கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications