டிஎன்பிஎஸ்சி புதிய பாடத் திட்டத்தை திரும்ப பெற கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்துள்ள பாடத்திட்ட மாற்றங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று திமுக தலைவர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்திலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருக்கிறது. குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வில், பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளில், தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள புதிய மாற்றங்களின்படி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் தமிழ் மொழியிலிருந்து இனி கேள்விகள் அதிகம் இடம் பெறாது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அதைத் தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப்படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண் எடுத்து ஈடு செய்ய முடியும் என்று ஏற்கனவே இருந்த நிலை தற்போது செய்யப்படும் மாற்றங்களால் பறி போய் விடும்' என்று 'தேர்வர்கள்' கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் மொழி மூலம் கல்வி கற்று தேர்வெழுதும் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் எதிரானதாக உள்ளன என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் அவர் எழுதியிருக்கும் கடிதத்திற்கு முரணாகவே அமைந்திருக்கின்றன.
எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ, பின்னடைவோ ஏற்படா வண்ணம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்துள்ள பாடத்திட்ட மாற்றங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
அதிர்ச்சியளிக்கிறது... டாக்டர்.ராமதாஸ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டம் வேலை தேடும் மாணவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நான்காம் தொகுதி (குரூப் - 4) பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழங்கப்படும் 200 மதிப்பெண்களில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொதுத் தமிழ் பாடத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது மொத்த மதிப்பெண்கள் 300 ஆக உயர்த்தப்பட்டு, அதில் பொதுத் தமிழுக்கான மதிப்பெண்கள் 75 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது நான்காம் தொகுதித் தேர்வுகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழுக்கான மதிப்பெண்களின் அளவு 50 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கிராம நிர்வாக அலுவலர் பணி, இரண்டாம் தொகுதி பணி ஆகியவற்றுக்கான போட்டித் தேர்வுகளிலிருந்து பொதுத் தமிழ் தாள் அடியோடு நீக்கப்பட்டிருக்கிறது.
போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் தமிழ்நாட்டில் இனி தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவல நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலவழி பள்ளிகளால் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை தற்போது உள்ளது.
தேர்வாணையம் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் தமிழே படிக்காமல் தமிழகத்தில் அரசு வேலை பெறமுடியும் என்ற நிலை உருவாகிவிடும். பொது ஆப்டிடியூட் பிரிவுக்கு அளவுக்கு அதிகமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால், அப்பிரிவில் வல்லமை பெறுவதற்காக தனிப்பயிற்சி நிலையங்களில் படித்தால் மட்டும்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் நிலை ஏற்படும்.
நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்து எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்களால் லட்சக்கணக்கில் செலவழித்து தனிப்பயிற்சி நிலையங்களில் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு இத்தகைய அரசு வேலைகள் எட்டாக் கனியாகிவிடும்.
அரசு வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைத்தான் அரசு வேலை பெறுவதற்காக ஏழை மாணவர்கள் நம்பியிருக்கின்றனர். சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்குரிய முக்கியத்துவத்தை குறைத்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது.
எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பாடத் திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications