யு.பி.எஸ்.சி-யின் புதிய நடைமுறைகள் நிறுத்தி வைப்பு... அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
டெல்லி: மாநில முதல்வர்கள், மக்களவை உறுப்பினர்களின் எதிர்ப்பினை அடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த மார்ச் 5ம் தேதி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. வரும் கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் எனக் கூறப்பட்டது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை.
இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது என்பதாகும்.
புதிய நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று பல மாநில முதல்வர்கள் கடிதம் எழுதினர்.
மேலும் தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பில் மேலும் அவர் கூறியதாவது:
"சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்கிறது. மத்திய அரசு பணியளர் தேர்வாணய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அது வரை புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும்" என்றார்.
முன்னதாக, யு.பி.எஸ்.சி. மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications