விவசாயிகளுக்கான நிவாரணத்தை வரும் பட்ஜெட்டிலாவது அறிவிக்கட்டும்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் கேட்டு வந்த நிலையில் 8-2-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் 50 சதவிகிதத்திற்கு மேல் மகசூல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படுமென்று அறிவித்தார்.
50 சதவிகிதத்திற்குக் குறைவாக மகசூல் பாதிக்கப்பட்டவர்களின் கதி என்ன? டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களில் பயிர் இழப்புக்கு உள்ளானவர்களின் கதி என்ன? டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களுக்கு குழு அனுப்பி, ஆய்வு செய்து, நிவாரணம் பற்றி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதே, அதன் கதி என்ன? விவசாயிகளைத் தவிர விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டார்களே அவர்களின் கதி என்ன?
சாகுபடி செய்ய தண்ணீர் கிடைக்காத நிலையில், நிலங்களைத் தரிசாகவே போட்டு வைத்திருந்த விவசாயிகளின் கதி என்ன? விவசாயிகள் வாங்கியிருந்த கூட்டுறவு கடன்களின் கதி என்ன? பயிர் கருகி வருவது கண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த 17 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் கேட்டுக் காத்திருக்கிறார்களே, அவர்களின் கதி என்ன?
பயிர் பாதிப்பு பற்றிய கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடி என்று தெரிவித்து மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தொடர்ந்து விவசாயிகள் கோரி வருகிறார்களே, அதன் கதி என்ன? என்றெல்லாம் தொடர்ந்து விவசாயிகள் வேதனையின் விளைவாக எழுப்பி வரும் வினாக்களுக்கு அரசினர் இதுவரை பதிலே அளிக்கவில்லை. 9-3-2013 அன்று தஞ்சையில் நடைபெற்ற ஜெயலலிதாவுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் இதற்கான அறிவிப்புகளைச் செய்யப் போவதாக ஊருக்கு ஊர் டெல்டா பகுதிகளிலே கூறி, தஞ்சையிலே கூட்டத்தைச் சேர்த்தார்கள்.
ஆனால் அங்கே எந்த அறிவிப்பும் செய்யாத காரணத்தால் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, மனம் வெதும்பி ஊர் திரும்பினார்கள். பேரவையில் நிவாரணம் அளித்ததை கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றதாக தஞ்சைக் கூட்டத்திலே ஜெயலலிதா பேசினார். ஆனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மத்திய மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் தான் போராடி வருவதாக வாரப் பத்திரிக்கைகளே எழுதியுள்ளன.
நாகை மாவட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் பெறுவதற்கான அறிவிப்பு வந்தது. விவசாயிகள் நேரில் சென்ற போது ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் என்றும், 600 ரூபாய் என்றும், 750 ரூபாய் என்றும் பல்வேறு வகையில் அரசால் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறியதன் பேரில் விவசாயிகள் அதனை வாங்க மறுத்து சாலை மறியலிலே ஈடுபட்டிருக்கிறார்கள். அரசு ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் என்று அறிவித்திருக்கும் போது, ஏன் இவ்வாறு தொகை குறைக்கப்பட்டது என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
சரியாகப் பதில் தெரிவிக்காததால், அவர்கள் நிவாரணத் தொகையை வாங்காமலே சென்று விட்டார்களாம். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 175க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக வந்து தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் முதல்வர் அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் என்பதை முழுமையாக வழங்க வேண்டுமென்றும், மேலும் பல கோரிக்கைகளையும் தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
விவசாயிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, முதல்வர் அறிவித்த குறைவான நிவாரணம் கூட, முறையாக வழங்கப்படாமல் அதிலே பெரும் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகளாகும். விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வரும் கோரிக்கைகள் எதையும் ஜெயலலிதா பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்காத காரணத்தினால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் போராட்டப் பாதையில் சென்று கொண்டிருப்பதை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, ஏற்கனவே பெரும் துன்ப துயரத்திற்கு ஆளாகியிருக்கும் தமிழக விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு விரைவில் வெளிவர விருக்கின்ற நிதி நிலை அறிக்கையிலாவது முழு அளவிலான நிவாரணங்களை மேலும் காலம் தாழ்த்தாமல் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications