நண்பரின் திருமணத்திற்கு கேரளா சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது கார் விபத்து: 3 வாலிபர்கள் பலி
பாலக்காடு: கேரளாவில் நடந்த நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்கு திரும்பிய 9 இளைஞர்கள் இருந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் (23), நாராயணமூர்த்தி (22), அனீஸ் நாயர் (22), கார்த்திகேயன், பாலாஜி, ஜோதி, கிரி, அசின்ராம், ஜாதேவ் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் நேற்று மாலை ஊருக்கு கிளம்பினர்.
பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி அஞ்சுமூர்த்தி மங்களம் என்ற இடத்தில் செல்கையில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த கார் டிரைவர் நினைத்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆனந்த் குமார், நாராயணமூர்த்தி, அனீஸ் நாயர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
கார்த்திகேயன், அசின்ராம், ஜாதேவ் ஆகியோர் ஆலத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பாலாஜி, ஜோதி, கிரி ஆகியோர் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஜோதி மற்றும் கிரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications