எம்.எல்.ஏக்கள் 'சஸ்பெண்ட்': தேமுதிக கண்டனப் பொதுக்கூட்டம்... விஜயகாந்த் அறிவிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேமுதிகவின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓர் ஆண்டுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கம் செய்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்தவிதமான பிற ஆதாயங்களையும் தகுதிகளையும் பெறக்கூடாது என்று அறிவித்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நடைபெறுவதும், சில சமயங்களில் கைகலப்பு ஏற்படுவதும் இந்தியாவின் இதர ஜனநாயக அமைப்புகளிலும், உலக நாடுகளின் பல்வேறு நாடாளுமன்றங்களிலும் அவ்வப்போது நடைபெறக் கூடியதுதான். இதுபோன்ற நேரங்களில் உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறியும், மன்னிப்புக் கேட்கும் வாய்ப்பு தந்தோ அல்லது ஓரிரு நாள்கள் அல்லது கூட்டத் தொடர் முடியும் வரையில் தாற்காலிகமாக நீக்கி வைப்பதுதான் வழக்கம்.
ஜனநாயகப் படுகொலை
ஆனால் நேர்மாறாக, ஓராண்டுக்கு உறுப்பினர்களை நீக்கி வைத்திருப்பது நீதிக்குப் புறம்பானது மட்டுமல்லாமல், ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுங்கட்சி எடுத்த நடவடிக்கையாகவே இதனைக் கருதுகிறேன்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தேமுதிகவோடு வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சியினருக்கு என் இதயமார்ந்த நன்றி. இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பில் மார்ச் 30ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்ட தொடரை தேமுதிக புறக்கணிக்கும்:
இதற்கிடையே விஜய்காந்த் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், 25.03.2013 அன்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தேமுதிகவை சேர்ந்த சட்டமன்ற கொறடா வி.சி.சந்திரகுமார் மற்றும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.பார்த்தசாரதி, து.முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு காலத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிமாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையாக விசாரணை நடைபெறவில்லை என்பதையும், பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவை உரிமைக்குழு அழைத்து கேட்கவில்லை என்றும் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன்.
மேலும் முறையாக விசாரிக்காதது மட்டுமல்ல, அளவுக்கு மீறிய தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்பதும், இது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமான செயல் என்றும் சொல்லியுள்ளேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவரையில் யாருக்கும் இப்படிப்பட்ட தண்டனை கொடுத்ததாக வரலாறு இல்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்கூட கருத்து சொல்ல உரிமையும், வாய்ப்பும் தரப்படவில்லை.
குறிப்பாக, தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் இந்த போக்கை சுட்டிக்காட்டி கண்டித்து இருப்பதையும் நினைவு கூறுகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக பணியாற்றி வருகிறது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அரசினரால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைமுறையில் உள்ளது. மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு.
இருப்பினும் எதிர்க்கட்சியை சேர்ந்த எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தற்காலிமாக நீக்கியும், பேசவிடாமல் தடுத்தும் வரும்போக்கு விவாதத்திற்குரிய ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை வகுக்காது என்று கருதுகிறேன்.
மேலும் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே பழிவாங்கும் போக்குடன் ஓராண்டுக்கு நீக்கியுள்ளதால் அதற்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் நடைபெறும் பொது விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
பொது விவாதத்தை புறக்கணிக்கும் எங்களது நோக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், எங்கள் மீது அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ள நல்லெண்ணமும், நம்பிக்கையும் வலுப்பெறும் என்றே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
தேமுதிகவினர் கைது
இதனிடையே எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, தேமுதிக,வினர், சென்னையில், சைதாப்பேட்டை உட்பட பல இடங்களில், போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும், அவர்கள் கலைந்து போகாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications