ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வாரீர்!... வைகோ அழைப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தில் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சு மயமாக்கி மனித உயிர்களுக்கும் கால்நடைகளின் உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்கிறது என்பதை, உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் மேதையும் விஞ்ஞானியுமான அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், அசைக்க முடியாத ஆதாரங்களுடன் ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகள் , டாக்டர் மார்க் செர்னைக்கின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும் என்றும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும் என்றும் பல்வேறு புள்ளி விவரங்களுடன் தந்த அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்து உள்ளேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தூத்துக்குடி அருகே கடலில் இருக்கின்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், ஸ்டெர்லைட் ஆலையால் அழியும் ஆபத்து ஏற்பட்டது.
ஸ்டெர்லைட்டை எதிர்த்து தூத்துக்குடியில் மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கடந்த பதினேழு ஆண்டுகளாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்து உள்ளனர். உண்ணாவிரதம், நடைப்பயணம், முற்றுகை, மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள், மக்கள் போராட்டமாக நடைபெற்றன.
ஸ்டெர்லைட்டை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில்,2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று, நீதியரசர் எலிபி தர்மாராவ் அவர்கள் தலைமையிலான அமர்வு, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பு அளித்தது.அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றது.
இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு வாய்தாவுக்குப் பின்னர், 2012 இறுதியில் இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்திருந்த நான், நிறைவுக் கட்டவாதங்களை முன் வைத்தேன். ஏப்ரல் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகி உள்ளனர்.
கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அமிலத் தன்மை கொண்ட ஸ்டெர்லைட் புகை, காற்று மண்டலத்தில் கலக்கும்போது, மழை பெய்யுமானால், அது அமில மழையாகும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அசார்க்கோ என்ற தாமிர உருட்டு ஆலை, மக்கள் போராட்டத்தில் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அகற்றப்பட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னரும்,அங்கே 30 கிலோ மீட்டர் சுற்றளவு நிலங்களை இன்னமும் சீர்படுத்த முடியவில்லை.
இந்த ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலத்தில் ரத்தினகிரி மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்று அமைக்கப்பட்டது. பின்னர், விவசாயிகள் ஆலையை உடைத்து நொறுக்கியதால்,அன்றைய மராட்டிய மாநிலத்தின் சரத்பவார் அரசு லைசன்சை இரத்து செய்து, ஸ்டெர்லைட்டை அகற்றியது. குஜராத், கோவா மாநிலங்கள் ஸ்டெர்லைட்டை உள்ளே நுழைய விடாத நிலையில், அரசு விதித்த நிபந்தனைகளையும் செயல்படுத்தாமல் உயிர்குடிக்கும் இந்த நாசகார ஆலை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நாக்பூரில் உள்ள நீரி ஆராய்ச்சி நிறுவனம், 1998 ஆம் ஆண்டு தந்த ஆய்வு அறிக்கையில், ஸ்டெர்லைட் சுற்றுச்சூழலை படுநாசமாக்கும்; அதனால், அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கை தந்தது.
ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போயின. கால்நடைகள் குறிப்பாக, ஆடுகள் ஸ்டெர்லைட் நச்சுத் தண்ணீரைப் பருகி இறந்து போயின. போபால் விசவாயு அழிவைப்போல், தூத்துக்குடி மாநகரத்துக்கும், சுற்றுவட்டாரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்களைக் காப்பாற்ற இந்த ஆலை அகற்றப்பட்டாக வேண்டும். இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களின் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்ச் 28 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி இராஜாஜி பூங்காவில் இருந்து புறப்பட்டு, ஸ்டெர்லைட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது. தூத்துக்குடி வியாபாரிகள் சங்கமும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பகல் 12 மணி வரை தூத்துக்குடியில் கடைகளை அடைக்க ஏற்பாடுகள் செய்து உள்ளன. சங்கு குழி சங்கத்தினர் அன்று கடல் தொழிலுக்குச் செல்வது இல்லை என்று தெரிவித்து உள்ளனர். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல்கட்சிகள் ஒருசேர இணைந்து இந்த அறப்போரை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் எல்லைகளைக் கடந்து போராட்டம் நடைபெறுவதால், கட்சிக் கொடிகளை இப்போராட்டத்தில் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில்பங்கு ஏற்க ஆர்த்தெழுந்து வாருங்கள்.
‘எங்களை, எங்கள் பிள்ளைகளை, எங்கள் பேரப்பிள்ளைகளை ஆரோக்கியமாக வாழவிடுங்கள்; நஞ்சைக் கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுங்கள்' என்ற முழக்கம் ஒலிக்கட்டும் இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications