127 வார்டுகளில் ‘அம்மா உணவகம்’ ஏப்.2ல் முதல்வர் திறப்பு

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் (200 வார்டுகள்) மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மண்டலத்துக்கு ஒரு உணவகம் வீதம் 15 மலிவு விலை உணவகங்களை முதல்வர் பிப்ரவரி 19ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த உணவகங்களில் இட்லி ரூ. 1-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயில் சாதம் ரூ. 3-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி 24 உணவகங்களும், மார்ச் 6ஆம் தேதி 34 உணவகங்களும் திறக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 73 வார்டுகளில் இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மீதமுள்ள 127 வார்டுகளில் உணவகங்கள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மலிவு விலை உணவகங்களுக்கு "அம்மா' உணவகம் என்று பெயர் மாற்றம் செய்ய அரசிடம் அனுமதி கோரி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலிவு விலை உணவகங்களில் "அம்மா' உணவகம் என்று பெயர் மாற்றப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
புதிதாக திறக்கப்பட உள்ள 127 உணவகங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. இவற்றை ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்ஃபரன்சிங் முறையில் திறந்து வைக்கவுள்ளார் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு உணவகமும் அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படுகின்றன. சுய உதவிக்குழுவினருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications