எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் ரெயிலில் இருந்து விழுந்து நாசம்: தீ வைத்து எரிப்பு… மறு தேர்வு வருமா?

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சாலம்: விருத்தாச்சலத்தில் இருந்து திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் கிழிந்து சேதமடைந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுதேர்வு நடைபெறுமா? என்பது பற்றியும் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் கடந்த 27-ந்தேதி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதனை10.5 லட்சம் மாணவர்கள் எழுதி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் 97 மையங்களில் 44 ஆயிரத்து 416 மாணவர்கள் எழுதி வருகிறார்கள்.

தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் அன்றைய தினமே குறிப்பிடப்பட்ட மண்டல தேர்வு மையத்திற்கு தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. அந்த விடைத்தாள்களை வழக்கம் போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒருதேர்வு மையத்திற்கு அனுப்பும் பணியில் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடி முத்துநகரில் உள்ள தேர்வு மையத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் ரெயில்வே சந்திப்பிற்கு கொண்டு வரப்பட்டது.

ரெயில் என்ஜினுக்கு அருகே உள்ள பெட்டியில் மாணவர்களின் விடைத்தாள்கள் அடங்கிய பண்டல்கள் அனைத்தையும் ஏற்றினர். அதன்பின் ரெயில் அங்கிருந்து 2.35 மணி அளவில் புறப்பட்டு சென்றது.

ரெயில் திருச்சியை சென்று அடைந்தபின், அங்கு இறக்கப்பட்ட பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு பண்டலை காணவில்லை என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து விருத்தாசலம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த விருத்தாசலம் அதிகாரிகள் ரெயில் நிலையம் முழுவதிலும் தேடிப் பார்த்தபோது, விடைத்தாள்கள் தண்டவாள பகுதியில் அங்கும், இங்குமாக காற்றில் பறந்தும், கிழிந்தும் கிடந்தது தெரியவந்தது.இந்த தகவல் வெளியே தெரிந்தால் சிக்கலாகி விடும் என்று கருதிய அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு ரெயில் நிலையத்தில் பறந்த அனைத்து பேப்பர்களையும் ஒன்று விடாமல் சேகரித்தனர். இதில் மிஞ்சிய பேப்பர்கள் மட்டும் ரெயில் வழி அஞ்சல் பணி அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டன.

மேலும் ஆங்காங்கே துண்டு துண்டாக கிழிந்து கிடந்த விடைத்தாள்கள், ரெயில் நிலையத்தின் வெளிப்புறத்திற்கு கொண்டு சென்று முட்புதர்களில் கொட்டி, அடையாளம் தெரியாத வகையில் தீயிட்டு எரிக்கப்பட்டன.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்வித் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சம்பவம் குறித்து ரயில்வே அஞ்சல் துறை அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். எனினும் விசாரணை விவரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ரெயிலில் அனுப்பிய மாணவர்களின் விடைத்தாள்கள் எண்ணிக்கை எவ்வளவு? ரெயிலில் சிக்கி கிழிந்த பேப்பர்கள் எத்தனை? எஞ்சிய விடைத்தாள்கள் எத்தனை உள்ளன? என்று ரெயில்வே வழி அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று நிருபர்கள் கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

மறுதேர்வு வருமா?

ரெயிலில் இருந்து விழுந்து விடைத்தாள்கள் சேதம் அடைந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து விடைத்தாள்களும் எந்த ஊருக்கு கொண்டு செல்லவேண்டுமோ அதற்காக கல்வித்துறையின் அதிகாரிகள் பாதுகாப்பாக கட்டி அவற்றில் ஒரு குறிப்பிட்ட பார்சல்களை விருத்தாசலம் ரெயில்வே தபால் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அது எந்த அளவுக்கு உண்மை? நடந்தது என்ன? என்ற விவரத்தை ரெயில்வே தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்த பின்னர்தான் உண்மை நிலை தெரியவரும் என்றார்.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விருத்தாச்சலம் ரெயில்வே நிலைய அதிகாரியிடம் இருந்து, கடலூர் முதன்மை கல்வி அலுவலரால் சரிபார்த்துப் பெற்றுக்கொண்டுள்ள பத்தாம் வகுப்பு மொழிப்பாடம், இரண்டாம் தாள் விடைத்தாள்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பெறப்பட்டவுடன் அவைகள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதில் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் இரண்டாம்தாளில் வங்கி விண்ணப்படிவம் இணைக்கப்படாத காரணத்தால் குழப்பம் உருவானது. இப்போது விடைத்தாள்கள் கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+