ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் நிறுவனருக்கு சிபிஐ பொன் விழாவில் கெளரவம்!
டெல்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான கான் பகதூர் குர்பான் அலி கான் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-ன் பொன்விழா நிகழ்ச்சியில் கவுரவிக்கப்படுகிறார்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐ தரப்பு அண்மையில் ஒரு கோரிக்கையை வைத்தது. அது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஆம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான கான் பகதூர் குர்பான் அலி கானின் குடும்பத்தினரை பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாக்கு அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. சரி அப்படி என்ன ஐஎஸ்ஐ அமைப்பை உருவாக்கியவருக்கும் நமது சிபிஐக்கும் தொடர்பு என்ற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்யும்.
நமது சிபிஐ அமைப்பானது 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியன்றுதான் தொடங்கப்பட்டது. இதற்கு முன்னோடி அமைப்பின் பெயர் சிறப்பு போலீஸ் அமைப்பு (Special Police Establishment).இது 1941ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நேரம் என்பதால் இந்த அமைப்பானது போர் கால ஊழல்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையகம் லாகூரில் செயல்பட்டு வந்தது. இதன் தலைமை அதிகாரியாக இருந்தவர்தான் கான் பகதூர் குர்பான் அலி கான்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னரும் கூட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அமைப்பாக இந்த அமைப்பு மாற்றப்பட்டது. அதன் தலைவராகவும் கான் பகதூர் குர்பான் அலி கான்தான் இருந்து வந்தார். இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிக்கப்படும் வரை கான்தான் தலைவராக இருந்தார். நாட்டுப் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணமான கைபர் பிரதேச ஐஜியாக நியமிக்கப்பட்டார். 1953 ஆம் ஆண்டு அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1950களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ என்ற உளவு அமைப்பு நிறுவப்பட்டதில் கானும் ஒருவர் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் சிபிஐக்கு முன்னோடி அமைப்பின் தலைவராக கான் பதவி வகித்ததால் வரும் 6-ந் தேதி நடைபெற உள்ள சிபிஐயின் பொன்விழா நிகழ்ச்சியில் அவர் கெளரவிக்கப்படுகிறார். அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் இந்த கெளரவத்தை பெற்றுக் கொள்ள இருக்கின்றனர். இதற்காகத்தான் மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சிபிஐ நாடியிருக்கிறது.












Click it and Unblock the Notifications