For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்பிரமணிய சாமியை நாடு கடத்த வேண்டும்: திருச்சி வேலுச்சாமி

By Mathi
Google Oneindia Tamil News

Trichy Velusamy demands deportation of Swamy from India
சென்னை: கிராமத்தில் திரியும் கோயில் மாடு மாதிரி சிங்களத்திற்கு ஆதரவாக திரிந்துகொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தமிழகத்திலிருந்து அடித்து துரத்துவது தமிழர்களின் கடமை. அவரை நாடு கடத்த வேண்டும் என்று தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகரும் சுவாமியின் முன்னாள் நெருங்கிய நண்பருமான திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார்.

நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி...

கேள்வி: ஐ.பி.எல்.போட்டிகளில் சிங்கள வீரர்களை அனுமதிக்க கூடாது என்கிற ஜெயலலிதா அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்கவேண்டும் என்கிறாரே சு.சாமி?

பதில்: சிங்களவர்களுக்கு வால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்பவர் சு.சாமி. புலிகள்... புலிகள்... என்று சொல்லி 91-ல் கருணாநிதி ஆட்சியை கலைக்க வைத்தவர் இவர். அப்போது ஜெயலலிதாவிற்காக அதைச் செய்தார். இப்போ அந்த ஜெயலலிதா அரசையே ராஜபக்சேவிற்காக கலைக்கச் சொல்கிறார். ஜெயலலிதாவா? கருணாநிதியா? என்றால் ஜெயலலிதா என்பார் சு.சாமி. ஜெயலலிதாவா? ராஜபக்சேவா? யார் முக்கியம்? என்று கேள்வி எழுந்தால் ராஜபக்சே பக்கமே கை தூக்குவார் இந்த அரசியல் தரகர். அப்படியிருக்க, சிங்களத்துக்கு எதிராக ஜெயலலிதா நடந்துகொண்டால் அண்ணன் சு.சாமி சும்ம இருப்பாரா?. அதனால்தான் ஒட்டுமொத்த தமிழகமும் சிங்கள வீரர்களை ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்கிறபோது ராஜபக்சேவுக்காக வக்காலத்து வாங்குகிறார்.

கேள்வி: தமிழீழம் பேசுவோர்கள் பொறுக்கிகள் என்கிறார் சு.சாமி. ஆனால், இதற்காக எந்த உணர்வாளர்களும் பொங்கி எழவில்லை?

பதில்: தமிழகத்தில் இருப்பவர்கள் அரசியல் கோமாளிகள் என்று இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத்பொன்சேகா சொன்னதற்கு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் துள்ளிக் குதித்தார்களே? இப்போ நம்மைப் பார்த்து பொறுக்கிகள் என்று சொல்கிறபோது அந்த வீரமும், வேகமும், கோபமும் எங்கே போனது? இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளை தாக்குகிறீர்கள்... சரி. காரணம், ஈழத்தமிழினத்தை அழித்த சிங்களருக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கோபம், உணர்வு. இந்த கோபமும் உணர்வும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக திருத்தம் செய்து அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற அழுத்தம் தமிழகத்தில் வலுத்த நிலையில், கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பிய சு.சாமி, இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப் போக வைப்பேன் என்றும் இதற்காக சர்வதேச அளவில் லாபி செய்துகொண்டிருக்கிறேன் என்றும் அந்த லாபியை உருவாக்கும் முயற்சியை என்னிடம் ராஜபக்சே கொடுத்திருக்கிறார் என்றும் பகிரங்கமாக சொன்ன போது ஏன் வரவில்லை? சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய நிலையில், சிங்களத்துக்கு பகிரங்க ஆதரவு தரும் சு.சாமியின் சட்டையைப் பிடித்து நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டாமா? அட்லீஸ்ட்... ஒரு எதிர்ப்புணர்வைக் கூட காட்டவில்லையே? அப்போ, நமது போராட்ட உணர்வுகள் யாருக்கு எதிராக?

முதலில் சிங்கள பாசத்தோடு அலைந்துகொண்டிருக்கும் துரோகிகளை அடக்காவிட்டால் நமது போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என்பதை உணர்வாளர்கள் புரிந்து கொள்வது அவசியம். தமிழீழ தாயகத்திற்காக நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து சக்திகளும் ஒரே சிந்தனையில் செயல்பட துவங்கியுள்ளது. தமிழீழ கோரிக்கைக்காக எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திப்பது எவ்வளவு அவசியமாக இருக்கிறதோ அதே அவசியமும் ஆவேசமும், தமிழினத்திற்கு எதிராக சிங்களத்திற்கு ஆதரவாக செயல்படும் சு.சாமி போன்றவர்களை நாடுகடத்த வேண்டும் என்கிற கோரிக்கையிலும் இருக்கவேண்டும். அவர் ஒரு அரசியல் கோமாளி, அவருக்கு எதிராக போராடுவது வீண் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அந்த ஒற்றைக் கோமாளி சர்வதேச அளவில் நம்மை காயடிக்கிறாரே? நம்மால் என்ன பண்ண முடிந்தது? கண்ணுக்குத் தெரியும் துரோகியை விட கண்ணுக்குத் தெரியாத துரோகி ரொம்ப ஆபத்தானவன் என்பார்கள். கண்ணுக்குத் தெரிகிற சு.சாமியே பயங்கரமான ஆபத்தானவராக இருக்கிறபோது அவருக்குப் பின்னால் மறைந்திருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஸோ... தமிழீழத்திற்காக போராடுபவர்கள் அதற்கு இணையாக சு.சாமியை நாடு கடத்த வேண்டும் என்றும் போராட வேண்டும். கிராமத்தில் திரியும் கோயில் மாடு மாதிரி சிங்களத்திற்கு ஆதரவாக திரிந்துகொண்டிருக்கும் சு.சாமியை தமிழகத்திலிருந்து அடித்து துரத்துவது தமிழர்களின் கடமை என நான் நினைக்கிறேன்.

கேள்வி: இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்களவர்கள் இந்தியா வம்சாவளியினர். 12 சதவீதம் உள்ள தமிழர்கள் கிடையாது. அதனால் தமிழர்களுக்காக கவலைப்படுவதை விட்டுவிட்டு சிங்களத்தின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா அக்கறை கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம்?

பதில்: இது இலங்கை தூதரின் கருத்தல்ல. இதன் பின்னணியில் இருப்பது சு.சாமிதான். குரல் மட்டும்தான் தூதருக்குரியது. கருத்தும் கானமும் சு.சாமியினுடையது. இவருக்கும் இலங்கை தூதருக்கும் நல்ல நட்பு உண்டு. சிங்களத்திற்கு ஆதரவாக இந்தியாவில் கருத்து பரப்பும் விவகாரங்களில் சு.சாமியோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஒரு ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் இலங்கை தூதருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. கரியவாசம் மட்டுமல்ல, இலங்கை தூதராக யார் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு இந்த இன்ஸ்ட்ரக்ஷன் பொருந்தும். இலங்கை தூதர் வேறு, சு.சாமி வேறு என்று நினைக்கக்கூடாது. அதனால் அந்த கருத்தின் அடிப்படையிலான சிந்தனை சு.சாமியால் உருவாக்கப்பட்டவை என்றார் அவர்.

English summary
Trichy Velusamy who is the once Close friend of Janata Party leader Subramanian Swamy now demands Centre should deport Swamy from India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X