பிரதமர், நிதி அமைச்சரை ஜேபிசி முன் அழைப்பது என்பது முடிந்து போன விவகாரம்: சாக்கோ
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு முன்பு பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்பதெல்லாம் முடிந்து போன விவகாரம் என்று அதன் தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.
பிரதமரையும் நிதி அமைச்சரையும் ஜேபிசி முன்பு ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்பது பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவின் தொடர் கோரிக்கை. இதற்காக அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதமும் அனுப்பியிருந்தார். ஆனால் இதை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ, இக்குழு முன்பு ஒரு அமைச்சரை சாட்சியமளிக்க ஆஜராகக் கோரி சம்மன் அனுப்ப வேண்டும் என்றால் குழுவினர் அனைவரும் ஒருமித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சரை ஆஜராகக் கோருவது தொடர்பாக ஒருமித்து முடிவெடுக்கப்படவில்லை.இதை சின்கா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜேபிசி முன்பு பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவையும் விசாரிக்க அழைக்க வேண்டும் என்றும் சின்கா வலியுறுத்தி வந்தார். ஆனால் சாக்கோவோ 'ஒருமித்த' கருத்து ஏற்படாமல் எப்படி ஆஜராகக் கோர முடியும் என்று கூறியிருப்பதன் மூலம் ஆ.ராசாவையும் அழைக்கப் போவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.
ஜேபிசி முன்பு ஆஜராக முடியாது- பிரதமர்
இதனிடையே ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஜேபிசி முன்பு ஒப்படைத்துவிட்டோம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிவில் எந்தத் தொடர்பும் எங்களுக்கு இல்லை. இதனால் நான் ஜேபிசி ஆஜராக முடியாது என்று பாஜக தலைவர் யஷ்வந்த் சின்காவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்கா, ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று கூறும் பிரதமர் மன்மோகன்சிங், அதை ஜேபிசி முன்பு விளக்கம் அளிக்க ஏன் தயங்குகிறார் என்ன்றார்.












Click it and Unblock the Notifications