For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தில் அமைதியை உருவாக்க முயற்சிக்க வேண்டும்: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் நேற்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம்:

கூடங்குளம் அணுஉலையில் சோதனை ஓட்டம் வெற்றி என்ற தலைப்பில் 2-4-2013 அன்று வெளிவந்துள்ள செய்தியில் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்திக்கு முந்தைய சோதனையோட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும், இச்சோதனையின்போது சுற்றுச்சூழலுக்கோ, பொது மக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் ஏதும் வெளியேறவில்லை என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தி வெளிவந்துள்ள அதே நேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்து வரும் சோதனை நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பை 3-4-2013 புதன்கிழமையன்று கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்து, அதனை நடத்தியிருக்கிறார்கள். மேலும் அங்கே உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறுகிறது.

நிலைப்பாட்டை மாற்றிய ஜெயலலிதா

கூடங்குளம் பிரச்சினையில் 13-9-2012 அன்று நான் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பெரும்பாலான பகுதிகள் இன்றைக்கும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய அளவிற்கு இருக்கின்ற காரணத்தால், மீண்டும் அதை நான் நினைவுபடுத்துகின்றேன்.கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.கூடங்குளத்தில் போராட்டம் இந்த அளவிற்கு பெரிதாக ஆவதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர்தான் காரணம் என்று எதிர்ப்பாளர்களே கூறுகிறார்கள். தொடக்கத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது அவர்களை அலட்சியப்படுத்த கருதுகிறது. அணு உலை பிரச்சினையில், முதலில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்வதற்காக, அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள்.

ஆரம்பத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களிடம், அந்த ஆலையினால் ஆபத்து இல்லை, ஆபத்து வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும், ஆபத்துக்களைத் தடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என்றெல்லாம் போராட்டக் குழுவினரிடம் விளக்கியிருந்தால், இந்த அளவிற்கு நிலைமை முற்றியிருக்காது.

மத்திய அரசின் முடிவினை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 21-9-2011 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலை எதிர்ப்பாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு மறுநாள் 22-9-2011 அன்று அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே மத்திய அரசு உடனடியாக கூடங்குளம் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் போராட்டக் குழுவினரோடு பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்தார்.

இப்படியெல்லாம் கூடங்குளம் மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் என்ன காரணத்தாலோ தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார். இப்படி முதலில் ஒன்றும் பிறகு ஒன்றும் எனக் கருத்தை மாற்றிச் சொல்வது ஜெயலலிதா அரசுக்கு வாடிக்கையான ஒன்று தானே?

உதயகுமார் கருத்து

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிப்பான போராட்டக் குழுவின் அமைப்பாளர் உதயகுமார் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஜெயலலிதா இந்தப் போராட்டத்தை முன்பு ஆதரித்தாரோ, அவரே இன்றைக்கு சத்தியாகிரக வழியில் போராடும் போராளிகளை கை விட்டு விட்டார் என்று குற்றஞ்சாட்டினார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த திட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களும் நானும் ஜெயலலிதாவைச் சந்தித்து கூறிய போது, அவர் அதனை அமைதியாகக் கேட்டு ஆதரவு தெரிவித்தார். அதன் காரணமாக மக்களின் உணர்வைப் புரிந்த ஒருவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பிய நேரத்தில், ஜெயலலிதா உடனடியாக அவருடைய நிலையை மாற்றிக் கொண்டு, இந்த முக்கியமான நிகழ்வில் மக்களைத் தூக்கியெறிந்து விட்டார் என்றும் உதயகுமார் தெரிவித்தார்.

பொதுமக்கள் கைகளில் போராட்டம்

இதிலிருந்தே போராட்டம் எதனால் இந்த அளவிற்கு முற்றியது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தற்போது நிலைமை போராட்டக்காரர்களைத் தாண்டி பொதுமக்கள் கைக்குச் சென்று விட்ட நிலையில், பிரச்சினையை அமைதியாகத் தீர்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமே தவிர, அதிகாரம் இருக்கிறது என்ற நினைவோடு செயல்பட்டாலோ, கருத்து தெரிவித்தாலோ அது பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

எப்படியோ இது வரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதைப் போல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். தொடக்கத்தில் போராட்டக்காரர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, பிறகு முதலமைச்சரைச் சந்திக்க வந்த போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச மறுத்தது தவறு.

மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவன செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள் தான்.

அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப் போல இந்த அரசு நினைக்கக் கூடாது. போராட்டம் நடத்துவோரும் பல ஆண்டு காலமாக பணிகளை செய்து முடித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் உகந்த முறையில் சுமூகமாக இதைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டுமே தவிர, இந்த மெஜாரிட்டி அரசு தங்களிடம் காவல் துறை இருக்கிறது என்ற நினைப்போடு, போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதிடக் கூடாது என்று நான் அந்த அறிக்கையிலே தெரிவித்ததைத் தான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் போராட்டக்காரர்களையும், பொதுமக்களையும் அடக்கி ஒடுக்க எண்ணாமல், இந்த முக்கியமான நேரத்தில் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து வைத்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான சூழ்நிலை அங்கே உருவாக முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Cautioning against use of police force on anti-KNPP activists, DMK Chief M Karunanidhi on Friday urged the Jayalalithaa government to hold talks with them to find an amicable solution to the issue.

English summary
Cautioning against use of police force on anti-KNPP activists, DMK Chief M Karunanidhi on Friday urged the Jayalalithaa government to hold talks with them to find an amicable solution to the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X