கயத்தாறில் கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் எழுப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாறில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ எழுந்து கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டம் கட்டப்படுமா என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு பூங்கா அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் மணிமண்டபம் அமைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
உடனே முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது,
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரது புகழை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் கயத்தாறில் மணிமண்டபம் எழுப்பப்படும் என்றார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ சுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத், சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் இந்த அறிவிப்புக்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.












Click it and Unblock the Notifications