பெங்களூர் வெடிகுண்டு.. வேலூர் இளைஞர் மீது சந்தேகம்... சுசூகி பைக்.. சென்னை யமாஹா பதிவு எண்!
சென்னை: பெங்களூர் பாஜக அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக வேலூர் இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் பாஜக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் சுசூகி மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சென்னை நங்கநல்லூர் தில்லைகங்காநகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரின் மகன் சுந்தருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த பைக்கை அவர் 5 வருடத்துக்கு முன்பே விற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலக வாயிலில் குண்டு வெடித்ததில் 13 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.
குண்டு வைக்கப்பட்டிருந்த பைக்கின் பதிவு எண் தமிழக பதிவு எண்ணாக (TN 22 R 3796) இருந்தது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, ஐபி, பெங்களூர் போலீசார் திரட்டினர்.
அப்போது இந்த பைக் சென்னை ஆலந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடக தனிப்படை போலீஸார் தமிழக உளவுப் பிரிவினருடன் மீனம்பாக்கத்தில் ஆலந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களிடம், அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.
இதில் அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நங்கநல்லூர் தில்லைகங்காநகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சுந்தருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார், சுந்தர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சுந்தர் இல்லாததால், அவர் தந்தையான ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கரநாராயணனிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், சாப்ட்வேர் என்ஜினீயரான சுந்தர், பெங்களூரில் வேலை செய்து வருவதால் அங்கு அந்த மோட்டார் சைக்கிளை கொண்டு சென்றதாகவும் பின்னர் 5 விற்றுவிட்டதாகவும் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுந்தர் அந்த பதிவு எண்ணில் யமஹா மோட்டார் சைக்கிளை (Yamaha RX-135) தான் பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் டிவிஎஸ் சூசுகி பைக்காகும்.
இதனால் வெடிகுண்டு வைத்த நபர்கள், போலீஸாரை திசை திருப்பவே பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதன் என்ஜின் நம்பர் (engine number 1108F001568), சேசிஸ் நம்பர் (chassis number 1108M5647) உள்ளிட்ட விவரங்களை சேகரித்தபோது அந்த பைக் ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, புதுபெருங்களத்தூரில் உள்ள ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்தும் தெரிய வந்தது.
ஷோரூமில் இருந்து புதுப்பெருங்களத்தூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஒருவர் இந்த மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர், அந்த மோட்டார் சைக்கிளை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் காஞ்சிபுரம் சென்று விசாரித்ததில், அந்த முகவரியில் ஒரு இளைஞர் தங்கியிருந்ததும், அவர் வேலூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால், அந்த இளைஞர் தற்போது அங்கு வசிக்கவில்லை.
எனவே, அந்த இளைஞர் மீது தற்போது காவல்துறையினரின் கவனம் திரும்பியுள்ளது. அவரைப் பற்றிய விசாரணையை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
பாஜக அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில், குண்டு நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞர் கொண்டு வந்து நிறுத்தும் படம் பதிவாகியுள்ளது. இந்த நபரும் காஞ்சிபுரத்தில் வசித்த வேலூர் இளைஞரும் ஒருவரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
பைக்கில் வைக்கப்பட்டிருந்தது 2 கிலோ வெடிமருந்து என்றும், அதை வெடிக்கச் செய்ய என்ன வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications