காங்கிரஸ் மீது பண்ருட்டி ராமச்சந்திரன் கடும் தாக்கு.. அப்ப, திமுகவுடன் தான் கூட்டணியோ!

சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். அவர் கூறுகையில்,
தீட்டப்படாத வைரம் கண்ணாடியாகத்தான் தெரியும். அதை தீட்டினால்தான் ஒளி வீசும். அதேபோல் ஒரு மாநிலத்தில் அமைதி, சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதை பொருத்தே அமையும். சட்டம்- ஒழுங்கைக் காப்பது மாநில அரசுக்குரியது. இதில் மத்திய அரசு தலையிடுவதும், அதிகாரத்தை பறிப்பதும் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்துவிடும்.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது அந்த மாநிலத்தில் ஒபாமா தலையிடவில்லை. அங்குள்ள மேயர், ஆளுநரை தொடர்பு கொண்டு உங்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அத்தகைய போக்கை தான் மத்திய அரசு கையாள வேண்டும்.
டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடந்தபோது இங்கிருந்து உள்ளாட்சி துறை அமைச்சர் சென்று பேசினார். நல்ல வேளையாக முதல்வர் டெல்லி செல்லவில்லை. ஏனென்றால் முதல்வருக்கே அங்கு பாதுகாப்பு கிடையாது.
முதல்வர் ஜெயலலிதா: கடந்த 15ம் தேதி முதல்வர்கள் மாநாட்டில் மொத்தம் 7 மாநில முதல்வர்கள்தான் கலந்து கொண்டனர். பெரும்பாலான முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை ஏன்?. டெல்லியில் இருந்த காங்கிரஸ் முதல்வரே அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன்: இதில் இருந்தே டெல்லியில் முதல்வர் கூட எவ்வளவு உஷாராக உள்ளார் என்பது தெரிகிறது. மாநிலங்களில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டால் மாநில அரசின் சம்மதம் இன்றி மத்திய அரசு தலையிடலாம் என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஒத்துழைப்பு தராவிட்டாலும் பரவாயில்லை. உபந்திரம் தராமல் இருக்க வேண்டும்.
அப்போது பட்டுக்கோட்டை காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கராஜன் குறுக்கிட முயன்றார்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: இந்த அவையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள். ஆனால் அவர்கள் இருக்கும் இடம்தான் சரியில்லை.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்
ரங்கராஜன் (காங்கிரஸ்): பண்ருட்டி ராமச்சந்திரன் வயதில் மிக பெரியவர். அனுபவசாலி. நாங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்கிறார். உண்மையில் நாங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறோம்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: கடைசி வரை காங்கிரசுக்காக உழைத்த, திறமைக்கு பெயர் போன ராஜாஜி, தியாகத்துடன் வாழ்ந்த காமராஜர் வரை யாரும் கடைசியில் காங்கிரசில் இருக்க முடியவில்லை. இன்றைக்கு முல்லைப் பெரியாறு பிரச்சனை, காவிரி வறண்டதால் விவசாயிகள் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் அதை மாநில அரசு திறமையாகக் கையாள்கிறது.
முதல்வர் ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் நல்ல எண்ணத்தில்தான் கூறுகிறார். முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சனையில் போராட்டம் வெடிக்கிறது. மாநில அரசு என்ன செய்ய முடியும் என்கிறார். ஆனாலும் மாநில அரசு நிறைய செய்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும், காவிரிப் பிரச்சனையிலும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்தாலும் இங்கு நடைபெறும் போராட்டங்களை சிறப்பாக கையாண்டு நீதிமன்றத்தில் வெற்றி பெற்று உள்ளோம். எனது மாநில அரசு நிறைய செய்துள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன்: தமிழ்நாட்டை பொறுத்தவரை ராமேஸ்வரம் மீனவர்கள் ஆனாலும் சரி, இலங்கை தமிழர்கள் பிரச்சனை ஆனாலும் சரி அது மத்திய அரசு அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால் தாக்கம் தமிழகத்துக்கு உண்டு. இந்த பிரச்சனைகளை தீர்க்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசு சுமூகமாக தீர்த்து இருந்தால் தமிழ்நாட்டுக்கு இந்த தலைவிதி வந்திருக்காது.
இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட அங்குள்ள நிலைமை கவலை அளிக்கிறது. வெளிப்படையாக சொல்வது என்றால் ராணுவம் அழைத்தால் பெண்கள் சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை அங்கு உள்ளது. எனவே இலங்கை தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தையாவது திரும்ப பெற்று இருப்பார்களேயானால் தமிழ்நாட்டில் இந்த அளவு ஏற்பட்ட கலக்கங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கும்.
இங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தை காவல்துறை திறமையாக சமாளித்தது. மத்திய அரசும் இதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாநில அரசு, காவல் துறைக்கு கேட்கிற நிதியை மத்திய அரசு முழுமையாக கொடுத்தால்தான் காவல் துறையை மேலும் செப்பனிட முடியும். அப்போது தான் நாட்டை சிறப்பாக காப்பாற்ற முடியும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், குற்றங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. மத்திய அரசின் பொருளாதார தேக்க நிலை குற்றங்களுக்கு காரணமாக உள்ளது. குற்றங்கள் பெருக பொருளாதார வீழ்ச்சியும் ஒரு காரணம்.
புளியந்தோப்பில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரமணி சாதாரண உடையில் மருத்துவமனைக்கு செல்லும் போது அவரிடம் இருந்தே 12 பவுன் நகையை பறித்து விட்டனர். என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் சிலர் கூட இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பொருளாதார சீர்குலைவு எந்த அளவு குற்றங்கள் பெருக காரணமாக உள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. விசாரணை கைதி சாவு அதிகம் இல்லாவிட்டாலும் மதுரவாயலில் கதிரவன் இறந்த சம்பவம், இதே போல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை வினோத் என்பவர் பிற சாதி பெண்ணுடன் ஓடியதற்காக போலீஸ் வேனில் கொண்டு சென்றபோது இறந்த சம்பவம் ஆகியவை நடந்துள்ளன.
இந்த ஆண்டு காவல்துறையின் காவலில் மொத்தம் 6 மரண சம்பவங்கள் நடந்துள்ளன. முதல்வர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை குற்றங்களை தடுக்க என்ன வழி என்பதிலும் போலீஸ் அக்கறை எடுக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசை வலுப்படுத்த வேண்டும். கூலிக்கு கொலை செய்பவர்களை கூண்டோடு முடக்க வேண்டும் என்றார் ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications