நிலக்கரி சுரங்க அறிக்கையை சட்ட அமைச்சரிடம் கொடுத்தோம்: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ இயக்குநர்!!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் சிபிஐ இயக்குநரை நேரில் அழைத்து அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்து திருத்தம் செய்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் பிரதமர் மன்மோகன்சிங்கும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
சிபிஐ ஒப்புதல்
ஆனால் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், சட்ட அமைச்சகத்துக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்த மனுவிலோ, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை சட்ட அமைச்சரிடம் அளித்தேன். அதை பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரி அமைச்சக இணை செயலாளர்களும் பார்வையிட்டனர் என்று தெள்ளத் தெளிவாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எப்படி சுதந்திரமான விசாரணை?
இதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பு வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், இப்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வருவது என்பதெல்லாம் எப்படி ஒரு சுதந்திரமான விசாரணையாக இருக்க முடியும்? இதில் நாம் எதை எதிர்பார்கக் முடியும்? என்று வாதிட்டார்.
அவசர ஆலோசனை
உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் 'ஒப்புதல்' வாக்குமூலத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் சட்டத்துறை அமைச்சர் அஸ்வினினி குமார் அவசர ஆலோசனை நடத்தினார். இதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகளுடம் இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜினாமா கோரிக்கை
உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் இனியும் பிரதமரும் சட்ட அமைச்சரும் பதவியில் நீடிக்கக் கூடாது.. இருவரும் ராஜினாமா செய்தாக வேண்டும் என்று பாஜக, இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications