For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரிப் படுகையில் மீத்தேன்: விளை நிலங்களை பாதுகாக்க வைகோ கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரிப்படுகையில் விளைநிலங்கள் பாதிக்கும் வகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எரிவாயுத் தேவைக்காக மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் "கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடேட்" என்ற நிறுவனத்திற்கு 29 ஜீலை 2010 லேயே உரிமம் வழங்கி உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிலப்பரப்பு பகுதிகளாக தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களும் இதற்கு உட்பட்ட 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள நிலங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பகுதி பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டு, எஞ்சிய 667 சதுர கிலோ மீட்டர், அதாவது ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இருநூற்று பத்து ஏக்கர் நிலப்பரப்பு மீத்தேன் வாயு எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.மீத்தேன் வாயு எடுப்பது என்பது எளிதான முறையல்ல. சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படும். விளை நிலங்கள் பாழாகும். நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குப் போய்விடும்.

தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. பூமிக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 500 அடி தொடங்கி 1650 அடி ஆழம் வரை நிலக்கரிப் படிமங்கள் காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இப்படிமங்களை அழுத்திக் கொண்டு உள்ளது. இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. நிலக்கரி பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயுவை வெளிக்கொணர முடியும்.

அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் இராட்சசக் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு 500 அடி முதல் 1650 அடி வரையுள்ள நிலத்தடி நீர் வெளியேற்றப்படும் போது காவிரி ஆற்றுப்படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கு கீழே சென்றுவிடும் பேரபாயம் நிகழும். நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிடுவதால் அப்பகுதி முற்றிலும் வறட்டு பாலைவனமாகப் போய்விடும் ஆபத்து உருவாகும்.

வங்கக் கடலோரப் பகுதிகளின் உப்பு கடல் நீர், உள்ளுறை கிணறுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் கலந்து ஒட்டுமொத்த நிலமும் பயனற்ற தேரிக்காடுகளாக, உப்பளங்களாக மாறிவிடும் அவலம் நேரும். வளங்கொழிக்கும் காவிரியாற்றுப் பாசனப் பகுதிகள் பாழ்பட்டு பயனற்றுப்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்துவிட்டது.

மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் பாதுகாத்து வந்த தங்களின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய நிலவளத்தை பறிகொடுத்து பரிதவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.

எனவே விவசாயிகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய காவிரியாற்றுப்படுகை நிலங்களில் மீத்தேன், பழுப்பு நிலக்கரி எடுக்க நடைபெறுகின்ற முயற்சிகளை உடனடியாகக் கைவிட்டு விவசாயிகளின் விலைமதிப்பற்ற நிலங்களை பாதுகாக்க முன்வருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

English summary
MDMK Gen sec Vaiko has urged the governments to save the form lands in Cauvery delta region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X