விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் கைது: மரக்காணத்தில் 144 தடை உத்தரவு

கடந்த 25ம் தேதி மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்திற்கு முதலில் போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், மரக்காணம் வன்முறை தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சியினர், சாதி மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து பாமகவினரில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பா.ம.க.வினர் பேச வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்காமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக ராமதாசை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணத்தில் 144 தடை உத்தரவு:
இந் நிலையில் மரக்காணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு போராட்டங்களும், அரசியல் தலைவர்களின் வருகையும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகோவுக்கு அனுமதி மறுப்பு:
இதற்கிடையே மரக்காணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அப்பகுதிக்குச் சென்றார். ஆனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் மரக்காணம் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர் திரும்பி வந்துவிட்டார்.
தாக்குதல் வழக்கில் 2 பேர் கைதை கண்டித்து 8 இடங்களில் பாமக மறியல்:
இதற்கிடையே வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (26), கார்த்திக் (26) இருவரும் சனிக்கிழமை இரவு பைக்கில் தங்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவர்களை கத்தியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சிலம்பரசன், கார்த்திக் ஆகிய இருவரையும் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தலித் அமைப்பினர் வந்தவாசி கோட்டை மூலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து குமார் (41), குப்பன் (25) இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறியும், 2 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் செம்பூரில் பாமகவினர் 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வந்தவாசியை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந் நிலையில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 2 தரப்பையும் சேர்ந்த 200 மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க 6 டி.எஸ்.பிக்கள் தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications