ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாக். கைதி உயிர்பிழைப்பது கஷ்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
சண்டிகர்: ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது. அங்கு போராட்டங்களும் வெடித்துள்ளன.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சனாவுல்லா. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக இவர் 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தடா சட்டப்படி 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்குகளில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சனாவுல்லா காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள காட்பல்வால் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவரை சககைதியான வினோத்குமார் என்பவர் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த சனாவுல்லா நினைவிழந்த நிலையில் முதலில் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் சண்டிகாரில் உள்ள பி.ஜி.ஐ. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் சனாவுல்லா இன்று ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
அவரது உடல் நிலை தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உயிர் பிழைப்பது கஷ்டம் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் கைதி சனாவுல்லா தாக்கப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடந்தது. 200-க்கும் மேற்பட்டோர் ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சனாவுல்லாவை தாக்கிய கைதி வினோத்குமார் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சரப்ஜித் சிங்கை தாக்கி கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கைதி தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
