கர்நாடகத்தில் பாஜகவை 'பதம் பார்த்த' எதியூரப்பா- ரெட்டி சகோதரர்கள்!

பல ஆண்டுகளாக அந்தக் கட்சி வட கர்நாடகத்தை தனது கோட்டையாக வைத்திருந்தது. அந்தப் பகுதியின் பெருவாரியான மக்களான முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த லிங்காயத்து சமூகத்தினரின் ஆதரவும் பிராமண சமூகத்தினரின் ஆதரவும் பாஜகவுக்குக் கிடைத்து வந்தது. இதனால் ஆட்சிக்கு வராவிட்டாலும் பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் பாஜகவே பெரும்பாலான இடங்களில் வென்று வந்தது.
ஆனால், அந்தப் பகுதியில் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் அடி விழுந்துள்ளது.
லிங்காயத்து சமூகத்தினரின் வாக்குகளை தனிக்கட்சி தொடங்கிய எதியூரப்பா அள்ளிக் கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் வட கர்நாடகத்திலும் கடலோரப் பகுதிகளிலும் பாஜக இம்முறை, கடந்த முறை பெற்ற இடங்களில் 50 சதவீத இடங்களை இழந்துள்ளது.
அதே போல பெல்லாரி உள்ளிட்ட ஆந்திராவை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த முறை ரெட்டி சகோதரர்களின் ஆதரவால் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால், இந்த முறை ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளரான ஸ்ரீராமுலு தனிக் கட்சி தொடங்கி போட்டியிட்டதால் அந்தப் பகுதியிலும் பாஜகவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரெட்டி சகோதரர்களில் முக்கியமானவரான மாஜி அமைச்சர் ஜனார்தன ரெட்டி இப்போது சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி ஹைதராபாத் சிறையில் இருக்கிறார்.
மேலும் பெங்களூரில் மொத்தமுள்ள 27 தொகுதிகளில் கடந்த முறை பெருவாரியான இடங்களில் வென்றது பாஜக. ஆனால், இந்தமுறை பாதிக்கும் இடங்களை இழந்துவிட்டது.
மொத்தத்தில் கடந்த தேர்தலில் 110 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 70 இடங்களை இழந்து வெறும் 40 இடங்களில் வென்றுள்ளதன் மூலம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications